கடந்த மார்ச் 1-ஆம் தேதி குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவக் கட்டளை மையம் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்தத் தாக்குதலில் உயிர் தப்பிய அமெரிக்க ராணுவ மேஜர் ஸ்டீபன் ராம்ஸ்பாட்டம் (Stephen Ramsbottom), ராணுவ உயர் அதிகாரிகள் முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மேஜர் குற்றச்சாட்டு
அமெரிக்காவின் சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியின் ’60 Minutes’ நிகழ்ச்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசிய மேஜர் ஸ்டீபன் ராம்ஸ்பாட்டம், குவைத்தில் உள்ள போர்ட் ஷுஐபா (Port Shuaiba) ராணுவக் கட்டளை மையத்தில் போதிய வான் பாதுகாப்பு வசதிகள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
“எங்களிடம் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கார் வெடிகுண்டு போன்ற தரைவழித் தாக்குதல்களைத் தடுப்பதற்கானவை. வான்வழித் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் எந்த ஏற்பாடும் அங்கு இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் ட்ரோன் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துரைத்ததாகவும், ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தக் கோரிக்கைகள் உரிய கவனம் பெறவில்லை என்றும், வாக்குறுதி அளிக்கப்பட்ட ட்ரோன் தடுப்பு அமைப்பு தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பு வந்து சேரவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவ வசதிகளும் போதுமானதாக இல்லை
தாக்குதல் நடைபெற்ற போர்ட் ஷுஐபா பகுதியில் மருத்துவ வசதிகளும் போதுமான அளவில் இல்லை என்று ராம்ஸ்பாட்டம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு நிரந்தர மருத்துவ உதவி மையம் இல்லை என்றும், மருத்துவர் மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்தக் குறைபாடுகள் காரணமாகக் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆயுதப் படைகள் குழுக்களிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
டிரம்ப் – சிபிஎஸ் இடையே கருத்து மோதல்
இதனிடையே, ’60 Minutes’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான செய்தி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவியபோதும், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலானவற்றைத் தடுத்து நிறுத்தியுள்ளன என்றும், இந்த விவரங்களைத் தொலைக்காட்சி நிறுவனம் தனது செய்தியில் உரிய முறையில் குறிப்பிடவில்லை என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ’60 Minutes’ நிகழ்ச்சியை நடத்துபவர்கள் குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
முழுமையான விளக்கம் கோரும் செனட்டர்
இந்த விவகாரத்தில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்தால் (Richard Blumenthal), பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் விரிவான விளக்கம் கோரியுள்ளார்.
போர்ட் ஷுஐபா தளத்தின் பாதுகாப்பு மதிப்பீடுகள், முன்கூட்டியே விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இதுவரை விரிவான பதிலை வெளியிடவில்லை. மார்ச் 1-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பான ராணுவ விசாரணை முடிவுகளும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை.
ஆறு அமெரிக்க வீரர்கள் உயிரிழந்த இந்தச் சம்பவம், ராணுவத் தளங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உயர் அதிகாரிகளின் முடிவுகள் குறித்து அமெரிக்காவில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனைக் குறிவைக்கும் ஈரானின் 4,000 கி.மீ. ஏவுகணை: அமெரிக்காவை நடுங்க வைக்கும் அதிநவீன ஆயுதம்!
