கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது அரங்கேறிய பந்து சேதப்படுத்தல் (Ball-tampering / Sandpapergate) விவகாரம் மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போது அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் சுயாதீன மன்றம் ஒன்றை அமைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) முடிவு செய்துள்ளது.

உஸ்மான் கவாஜாவின் புத்தகத்தால் மீண்டும் சர்ச்சை
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா எழுதியுள்ள ‘Sabr’ என்ற சுயசரிதை புத்தகத்தில், 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நடந்த பந்து சேதப்படுத்தல் சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது என்ற அப்போதைய விசாரணையின் முடிவுக்கு மாறாக, அணியில் இருந்த பலருக்கும் இந்தத் திட்டம் தெரிந்திருந்ததாகத் தனது புத்தகத்தில் கவாஜா குறிப்பிட்டுள்ளார். கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முந்தைய ஆட்டத்திலும் பந்தின் தன்மையை மாற்ற முயற்சிகள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
கவாஜாவின் இந்தக் கருத்துகளுக்கு முன்னாள் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆதரவு தெரிவித்துள்ளார். அதேவேளையில், அப்போதைய அணியில் இருந்த பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் தங்களுக்குத் தெரியாது என மறுத்துள்ளனர். இதனால், 2018 சம்பவம் தொடர்பாக வீரர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய முயற்சி
இந்தச் சூழலில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இடைக்காலத் தலைவர் டேவிட் பூன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் ஆகியோர் சுயாதீன மன்றம் அமைப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்த டாட் கிரீன்பெர்க், இந்த மன்றம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை அல்ல என்று தெரிவித்துள்ளார். அப்போது தங்களது கருத்துகளைப் பகிர வாய்ப்பு கிடைக்காதவர்கள் அல்லது மேலும் சில தகவல்களைத் தெரிவிக்க விரும்புபவர்கள், பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட சூழலில் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள இந்த மன்றம் வாய்ப்பளிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இதில் பங்கேற்பது முழுக்க முழுக்க வீரர்கள் மற்றும் பணியாளர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்றும், இதன் அடிப்படையில் புதிய தண்டனைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மன்றத்தில் பகிரப்படும் தகவல்களில் எவற்றைப் பொதுவெளியில் வெளியிடுவது என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் நிர்வாகக் குழுவே முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
கவாஜா, வார்னர் எழுப்பும் கேள்விகள்
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முயற்சியை வரவேற்றுள்ள உஸ்மான் கவாஜா, மன்றத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவற்றைப் பொதுமக்களிடம் வெளியிடுவது என்பதை வாரியமே தீர்மானிக்கும் நிலையில், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
டேவிட் வார்னரும் இந்த மன்றத்தின் செயல்பாடு குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் சுதந்திரமாகப் பேசுவதற்கான உண்மையான பாதுகாப்பான சூழல் கிடைக்குமா என்றும், பொதுமக்கள் எதிர்பார்க்கும் உண்மை முழுமையாக வெளிவருமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே நடத்தப்படும் வெளிப்படையான சுயாதீன விசாரணையே சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டு தடையும், கேமரூன் பான்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதத் தடையும் விதிக்கப்பட்டன. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த விவகாரம் விவாதத்திற்கு வந்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய மன்றம் எந்த அளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
