கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரின்போது அரங்கேறிய பந்து சேதப்படுத்தல் (Ball-tampering / Sandpapergate) விவகாரம் மீண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போது அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளும் வகையில் சுயாதீன மன்றம் ஒன்றை அமைப்பதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஆனால், இந்த மன்றத்தில் தெரிவிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படுமா என்ற கேள்வியை முன்னாள் வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் எழுப்பியுள்ளனர். மேலும், மூடிய அறைக்குள் நடைபெறும் இந்த நடவடிக்கையை விட, வெளிப்படையான பொது விசாரணையே உண்மையை வெளிக்கொண்டு வரும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கவாஜாவின் புத்தகத்தால் மீண்டும் வெடித்த சர்ச்சை
உஸ்மான் கவாஜா எழுதியுள்ள ‘Sabr’ என்ற சுயசரிதை புத்தகத்தில், 2018-ஆம் ஆண்டு கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் நடைபெற்ற பந்து சேதப்படுத்தல் சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சம்பவம் அப்போது தண்டனை பெற்ற ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது என்ற கருத்துக்கு மாறாக, அணியில் இருந்த பலருக்கும் இதுபற்றி தெரிந்திருந்ததாக கவாஜா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பந்து சேதப்படுத்தல் சம்பவம் தொடர்பாக அணியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கவாஜாவின் கருத்துகளுக்கு டேவிட் வார்னர் மற்றும் அப்போது அணியில் இடம்பெற்றிருந்த சாட் சேயர்ஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேவேளையில், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் தங்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என மறுத்துள்ளனர்.
இந்த மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா புதிய மன்றத்தை அமைப்பதாக நவம்பர் 18-ஆம் தேதி அறிவித்தது.
ரகசிய மன்றம் – கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் விளக்கம்
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி டாட் கிரீன்பெர்க் மற்றும் வாரிய உறுப்பினர் டேவிட் பூன் ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த மன்றம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விசாரணையை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கை அல்ல என்று டாட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து தங்களது தரப்பு அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர விரும்பும் வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட சூழலை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த மன்றத்தில் பங்கேற்பது முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும், இதன் மூலம் யாருக்கும் புதிதாகத் தண்டனை அல்லது தடைகள் விதிக்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
மன்றத்தின் செயல்பாடுகள் நிறைவடைந்த பிறகு, அதில் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் எவற்றைப் பொதுவெளியில் வெளியிடுவது என்பதை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் வாரியமே முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கவாஜாவின் அடுக்கடுக்கான கேள்விகள்
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய முயற்சியை வரவேற்றுள்ள உஸ்மான் கவாஜா, அதன் வெளிப்படைத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அன்று உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவே பொதுமக்கள் விரும்புகிறார்கள். வீரர்கள் மட்டுமின்றி, அப்போது பணியாற்றிய துணைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குத் தெரிந்ததைப் பேசினால்தான் முழு உண்மையும் வெளிவரும்.
நான் இந்த மன்றத்திற்குச் சென்று ஒரு தகவலைத் தெரிவிக்கிறேன். ஆனால், அதை வெளியிட வேண்டாம் என்று வாரியம் முடிவு செய்துவிட்டால் என்ன பயன்? அறிக்கையில் தங்களுக்குச் சாதகமான தகவல்களை மட்டும் வாரியம் தேர்ந்தெடுத்து வெளியிட்டால், நாம் மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே சென்றுவிடுவோம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறிய சில முன்னாள் பணியாளர்கள் ரகசியக் காப்பு ஒப்பந்தங்களால் (NDA) கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களால் இந்த மன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கவாஜா குறிப்பிட்டுள்ளார்.
பொது விசாரணை வேண்டும் – டேவிட் வார்னர் வலியுறுத்தல்
இதேபோல், 2018-ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் 12 மாதத் தடையை அனுபவித்த டேவிட் வார்னரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் புதிய மன்றம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனைகளை ஏற்றுக்கொண்டுவிட்டோம். இப்போது எங்களுக்குத் தேவையானது வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும்தான். இது உண்மையிலேயே பாதுகாப்பான சூழலாக இருக்குமா? அப்போது அங்கிருந்த அனைவராலும் சுதந்திரமாகப் பேச முடியுமா?
மூடிய அறைக்குள் நடைபெறும் நடவடிக்கையை விட, அந்தச் சம்பவத்தின்போது பணியில் இருந்த அனைவரும் பொதுவெளியில் வந்து தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் திறந்த, சுயாதீனமான பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் இனி புதிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்பது தங்களது நோக்கமல்ல என்றும், உண்மைகள் வெளிப்படுவதும் பொறுப்புணர்வு உறுதி செய்யப்படுவதுமே முக்கியம் என்றும் வார்னர் வலியுறுத்தியுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விவாதப் பொருளாகியுள்ள இந்தச் சம்பவத்தில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைத்துள்ள மன்றம் எந்த அளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
