சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராமின் மெசேஜிங் வசதிக்காக ‘டைரக்ட்’ (Direct) என்ற தனி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இன்ஸ்டாகிராம் செயலியைத் திறக்காமலேயே நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனிப்பட்ட உரையாடல்கள், குழு உரையாடல்களை மேற்கொள்ள முடியும்.

குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்தச் செயலியைப் பயன்படுத்த இன்ஸ்டாகிராம் கணக்கு கட்டாயமில்லை. மின்னஞ்சல் முகவரி அல்லது செல்போன் எண்ணைப் பயன்படுத்தியும் புதிய கணக்கைத் தொடங்கலாம்.
இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லாமலும் பயன்படுத்தலாம்
ஏற்கெனவே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் தங்களது வழக்கமான பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி டைரக்ட் செயலியில் உள்நுழையலாம். அவ்வாறு உள்நுழையும்போது, இன்ஸ்டாகிராமில் உள்ள பழைய உரையாடல்களும் புதிய செயலியில் ஒத்திசைக்கப்படும்.
இன்ஸ்டாகிராம் கணக்கு இல்லாதவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம். ஆனால், அவர்களுடன் ஏற்கெனவே தொடர்பில் உள்ளவர்கள் அல்லது அவர்களது தொடர்புப் பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே உரையாடலைத் தொடங்கவோ குழுவில் சேர்க்கவோ முடியும்.
புதிய வசதிகள் என்னென்ன?
டைரக்ட் செயலியில் உரையாடல்களை சுவாரஸ்யமாக்கும் வகையில் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
- Draw: உரையாடல்களுக்குள் நேரடியாக ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை வரையலாம்.
- Notes: நண்பர்களின் குறுகிய தகவல்களை மெசேஜ் இன்பாக்ஸின் மேற்பகுதியில் பார்க்கலாம்.
- Stickers: விருப்பத்திற்கேற்ப தனிப்பயன் ஸ்டிக்கர்களை உருவாக்கிப் பகிரலாம்.
- Voice Effects: குரல் செய்திகளுக்கு சிரிப்புச் சத்தம், நீருக்கடியில் பேசுவது போன்ற ஒலி விளைவுகளைச் சேர்க்கலாம்.
- Themes: ஒவ்வொரு உரையாடலுக்கும் விருப்பமான பின்னணி வடிவமைப்புகளைத் தேர்வு செய்யலாம்.
பாதுகாப்பு வசதிகளுக்கும் முக்கியத்துவம்
பயனர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, யார் தங்களுக்கு மெசேஜ் அனுப்பலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தேவையற்ற தொடர்புகளைப் புகாரளிக்கவும், தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும்.
13 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தச் செயலியைப் பயன்படுத்த முடியும். இளம் பயனர்களின் பாதுகாப்புக்காக வயது சரிபார்ப்பு தொழில்நுட்பம் மற்றும் பெற்றோருக்கான கண்காணிப்பு வசதிகளையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இரண்டு நாடுகளில் மட்டுமே அறிமுகம்
டைரக்ட் செயலி தற்போது துருக்கி மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து மெட்டா இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, இந்தியப் பயனர்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இன்ஸ்டா ரீல்ஸை இனி வாட்ஸ்அப்பில் ஈஸியாக ஷேர் செய்யலாம்! – மெட்டாவின் புதிய அப்டேட்
