கேரள மாநிலத்தில் பாஜகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் மற்றும் முன்னாள் தடகள வீராங்கனை பத்மினி தாமஸ் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகியுள்ளனர். இருவரும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவிலிருந்து விலகிய பத்மஜா வேணுகோபால்
கேரள முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மறைந்த கே. கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள பத்மஜா, தனது முடிவு அவசரத்தில் எடுத்த தவறான முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் கொள்கைகளும் தனது அரசியல் சிந்தனைகளும் முழுமையாக ஒத்துப்போகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், பாஜக தலைவர்கள் தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றும், கட்சியில் தனக்கு எந்தப் புகாரும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தற்போது காங்கிரசில் மீண்டும் இணைவது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பத்மினி தாமஸும் விலகல்
முன்னாள் இந்திய தடகள வீராங்கனையும், கேரள பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநில துணைத் தலைவருமான பத்மினி தாமஸும் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் இருந்தும் தன்னால் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறை அல்லது அரசியல் தளத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் முக்கியப் பொறுப்பு வழங்குவது தொடர்பாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்ப விரும்புவதாகவும் பத்மினி தாமஸ் தெரிவித்துள்ளார்.
காங்கிரசிலும் எழுந்துள்ள எதிர்ப்பு
பாஜகவிலிருந்து விலகிய இரு தலைவர்களும் காங்கிரசுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களை உடனடியாகக் கட்சியில் சேர்ப்பதற்கு காங்கிரசின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கேரள மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அலோஷியஸ் சேவியர், பல ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த அடிமட்டத் தொண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பத்மஜா மற்றும் பத்மினி போன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்தால், அவர்களுக்கு உடனடியாக முக்கியப் பொறுப்புகள் வழங்காமல் அடிமட்டத்தில் இருந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரள பாஜகவில் உட்கட்சிப் பூசல்?
முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து விலகியிருப்பது கேரள பாஜகவுக்குள் அதிருப்தி மற்றும் தலைமை குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. புதியவர்களைக் கட்சியில் இணைத்துக்கொள்வதில் காட்டப்படும் ஆர்வத்திற்கு இணையாக அவர்களைத் தொடர்ந்து கட்சியில் தக்கவைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
கேரளத்தில் அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்த பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், முக்கியப் பிரமுகர்களின் அடுத்தடுத்த விலகல் அக்கட்சிக்கு சவாலாக மாறியுள்ளது.
கேரளம் சட்டமன்றத் தேர்தல் – இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…
