சீனாவின் தியாங்காங் (Tiangong) விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலி பெற்றுள்ளார். அவரை ஏற்றிச் சென்ற சீனாவின் ஷென்ஷோ-24 (Shenzhou-24) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, திட்டமிட்ட சுற்றுப்பாதையை அடைந்துள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, நவம்பர் 25ஆம் தேதி காலை 8.18 மணிக்கு லாங் மார்ச்-2எஃப் (Long March-2F) ராக்கெட் மூலம் ஷென்ஷோ-24 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தில் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹாங்போ, வூ யி ஆகியோருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 40 வயதான முன்னாள் விமானப்படை விமானி முகமது ஜீஷான் அலியும் பயணித்துள்ளார். இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பாகிஸ்தானியர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
விண்வெளி நிலையத்தில் அறிவியல் ஆய்வுகள்
தியாங்காங் விண்வெளி நிலையத்தில் ஜீஷான் அலி சுமார் 5 முதல் 10 நாட்கள் வரை தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளார். அவர் பேலோட் நிபுணராக (Payload Specialist) செயல்பட்டு, சீனா – பாகிஸ்தான் கூட்டு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்திற்காக அவர் சீனாவில் ஏழு மாதங்கள் தீவிரப் பயிற்சி பெற்றுள்ளார். விண்வெளிப் பயிற்சியுடன் சீன மொழியையும் கற்றுக்கொண்டுள்ளார்.
சீனா – பாகிஸ்தான் விண்வெளி ஒத்துழைப்பு
சீனாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான விண்வெளி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தப் பயணம் இரு நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. விண்வெளியில் தனது நாட்டின் பெயரையும் மக்களின் நம்பிக்கையையும் சுமந்து செல்வதாக ஜீஷான் அலி தெரிவித்துள்ளார்.
சீனாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: நிலவியல் மையம் தகவல்
