கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமாரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் இன்று அரை மணி நேரம் விசாரணை நடத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, நேற்று தியாகதுருவத்தில் உள்ள சுற்றுலா ஆய்வு மாளிகையில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சுமார் ஒரு மணி நேரம் சிருஷ்டி சிங் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், விசாரணையின் இரண்டாவது நாளான இன்று காலை கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்குமாரிடம் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். புகார் தொடர்பான விவரங்கள் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர் ஆனந்தன், பாதுகாப்புக் காவலர் அபுதாஹிர், முன்னாள் எழுத்தர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த சிருஷ்டி சிங் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான வழக்கு: விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் விசாரணையைத் தொடங்கினார்!
