எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியராக இருந்தாலும், அவரை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்காமல் தடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மசூதி என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

மசூதியில் தொழுகை நடத்தத் தடை – உயர் நீதிமன்றத்தில் மனு
பாஜக சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகியான சையது இப்ராஹிம் என்ற வேலூர் இப்ராஹிம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சேலத்தில் உள்ள மசூதிக்குத் தொழுகை நடத்தச் சென்றபோது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகியான சையது மூசா என்பவர் தன்னை மசூதிக்கு வெளியே தடுத்து நிறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
அரசியல் கொள்கைகளை மசூதிக்கு வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமிநாராயணன், இஸ்லாத்தின்படி யார் உண்மையான முஸ்லிம் என்பதை எல்லாம் வல்ல அல்லாஹ் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும், இஸ்லாமியர் ஒருவர் தொழுகைக்காக மசூதிக்குச் செல்லும்போது, அரசியல் உள்ளிட்ட தாம் சார்ந்திருக்கும் பிற கொள்கைகள் அனைத்தையும் மசூதியின் வாயிலுக்கு வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
கடவுளைத் தொழும் இடத்தில் அரசியல் சார்ந்த தொடர்புகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், ஒருவர் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் முஸ்லிமாக இருக்கும் பட்சத்தில் மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மசூதி என்பது அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டது
மசூதி என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் என்றும், மனிதர்கள் அதன் மேலாளர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மசூதி கட்டுவதற்காக ஒருவர் நிதியுதவி செய்திருந்தாலும், அதற்காக அந்த மசூதியை அவர் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
மனுதாரர் ஒரு இஸ்லாமியர் என எல்லாம் வல்ல அல்லாஹ் முடிவு செய்துவிட்டால், அதுகுறித்து மனிதர்கள் வேறு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்லாத்தின் நெறிகளை மீறுபவர்களுக்கு உரிய தண்டனையை அல்லாஹ் வழங்குவார் என்றும், அந்தத் தண்டனை குறித்து மனிதர்கள் முடிவெடுக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமியர் ஒருவர் வழிபடுவதைத் தடுப்பது பாவச்செயல் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரையும் அழைத்துக் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
