ரயில் தாமதமாக வந்ததால் இணைப்பு விமானத்தைத் தவறவிட்ட தம்பதிக்கு ரூ.63,199 இழப்பீடு வழங்குமாறு வடக்கு ரயில்வேக்கு ஜம்மு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4 மணி நேரம் தாமதமாக வந்த ரயில்
ஜம்முவைச் சேர்ந்த மோகித் சிங் பாவ் மற்றும் அவரது மனைவி தாமினி பில்லோரியா ஆகியோர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி ஜம்முவில் இருந்து டெல்லிக்கு டெல்லி துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர்.
இந்த ரயில் டிசம்பர் 20-ம் தேதி அதிகாலை 3.55 மணிக்கு டெல்லியைச் சென்றடைய வேண்டும். ஆனால், சுமார் 4 மணி நேரம் தாமதமாக காலை 7.50 மணிக்கே டெல்லியை அடைந்தது.
இதற்கிடையே, அந்தத் தம்பதி டெல்லியில் இருந்து கவுகாத்திக்கு காலை 7.15 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானத்தில் பயணிக்க ஏற்கெனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். ரயில் தாமதமாக வந்ததால் அவர்களால் விமானத்தைப் பிடிக்க முடியவில்லை.
புதிய விமான டிக்கெட், ஓட்டல் செலவு
விமானத்தைத் தவறவிட்டதால், கவுகாத்திக்குச் செல்ல புதிதாக விமான டிக்கெட் வாங்க ரூ.35,699 செலவிட்டனர். மேலும், டெல்லியில் ஓட்டலில் தங்குவதற்கு ரூ.2,500 செலவு செய்தனர். இதனால் மொத்தம் ரூ.38,199 கூடுதல் செலவு ஏற்பட்டதாகக் கூறி நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
மூடுபனி காரணமாக தாமதம் – ரயில்வே தரப்பு வாதம்
விசாரணையின்போது, மூடுபனி காரணமாகவே ரயில் தாமதமானதாக வடக்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே விதிகளையும் சுட்டிக்காட்டி, தாமதத்திற்கு ரயில்வே பொறுப்பேற்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.
ஆனால், மூடுபனியால் தாமதம் ஏற்பட்டது என்பதற்கான ஆதாரங்களை ரயில்வே நிர்வாகம் சமர்ப்பிக்கவில்லை என நுகர்வோர் ஆணையம் குறிப்பிட்டது. உரிய காலத்தில் எழுத்துப்பூர்வமான பதிலையும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்த ஆணையம், ரயில்வே தரப்பு வாதத்தை ஏற்க மறுத்தது.
ரூ.63,199 இழப்பீடு வழங்க உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பவன் தேவ் கோட்வால் மற்றும் உறுப்பினர் நீலம் பாலா பரத்வாஜ் ஆகியோர், ரயில்வே சேவையில் குறைபாடு இருப்பதாகக் கூறி தம்பதிக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி, புதிய விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் செலவான ரூ.38,199-க்கு ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மன உளைச்சல் மற்றும் சிரமத்திற்காக ரூ.20,000, வழக்கு செலவுக்காக ரூ.5,000 என மொத்தம் ரூ.63,199 வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொகையை உத்தரவு கிடைத்த ஆறு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் 145.07 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சாதனை! இந்திய ரயில்வே புதிய மைல்கல்
