மாநில சுயாட்சிக்கு சவால்விடும் வகையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 210 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஷாஜகான், ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களின் நலனுக்காக ரூ.30 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையின மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.900 கோடி நிதி கோரியுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிதிக் கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிதி கிடைத்தவுடன் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஷாஜகான், மாநில சுயாட்சிக்கு சவால்விடும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகத் தனது கருத்தைத் தெரிவித்தார்.
