திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை வெறும் மதம் சார்ந்த பிரச்சினையாக மட்டும் அணுகிவிட முடியாது என்றும், இது மாநிலத்தின் அதிகாரம், உரிமை மற்றும் மாநில சுயாட்சியுடன் தொடர்புடைய முக்கியமான விவகாரம் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைப் பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
சென்னை மண்ணடியில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகத் தனது கருத்துகளைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், மாநிலத்தின் அதிகார வரம்பிற்குள் மத்தியப் படைகளின் தலையீடு பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டார். மாநிலத்தின் அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் உரிய வரம்புகளை மீறிய தலையீடுகள் ஏற்படுவது மாநில சுயாட்சிக்கு உகந்ததல்ல என்றும் தெரிவித்தார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF) உதவியுடன் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்ற அமர்வு, இதற்கு முன்பு சபரிமலை மற்றும் சிதம்பரம் கோயில் விவகாரங்களில் இதேபோன்ற நிலைப்பாட்டை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.
தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்துடன் தொடர்புடைய முக்கியமான விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதானத்துடன் செயல்படவில்லை என்பது தங்களது கருத்து என்றும் கூறினார்.
தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவு பிரதான வழக்கின் தீர்ப்பைப் போன்ற நிலையைப் பெற்றிருப்பது நீதித்துறை நடைமுறையின் அடிப்படையில் சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மாநில சுயாட்சிக்கும் மாநிலத்தின் நிர்வாக உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடக் கூடாது என்றும், மாநிலத்தின் உரிமைகளும் அதிகாரங்களும் மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இத்தகைய முக்கியமான மாநில உரிமைப் பிரச்சினையில் அரசியல் கட்சிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்றும், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் கருதப்படும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் மதச்சார்பின்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மத நல்லிணக்கத்தையும் அரசமைப்புச் சட்ட விழுமியங்களையும் காப்பது அனைவருடைய பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அணுகிய விதம் ஏற்புடையதல்ல எனக் கூறிய அப்துல் ரஹீம், இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
தமிழகத்தின் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பாதிக்கும் வகையிலான உத்தரவுகளுக்குத் தடை பெறுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு!
