தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலுரை வழங்கவுள்ளார். இந்த சூழலில் இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.


பேரவை தொடங்கியவுடன் ஒன்றிய முன்னாள் அமைச்சர் சரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பின் எம்.எல்.ஏ முத்துராஜா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆலோசித்து முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன. புதுக்கோட்டைக்கு ரூ.642 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்” என்றார்.
அதன்பின் அவையில் பேசிய அமைச்சர் பொன்முடி, “அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் கல்லூரி அமைக்க நிதி நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்குவந்தபிறகு இதுவரை 31 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.திருவண்ணாமலை தொகுதியில் 3 கல்லூரிகள் உள்ளன. செய்கம் தொகுதியில் கல்லூரி அமைப்பது தொடர்பாக வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும். அரசு கலைக்கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக 20 சதவீத இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சுயநிதி கல்லூரிகளைவிட அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் விரும்புகின்றனர்” என்றார்
