கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகியைப் பொதுமக்கள் பிடித்துத் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சொந்தக் கட்சி நிர்வாகிகளின் இத்தகைய அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குளித்தலை சம்பவமும் மக்கள் கொந்தளிப்பும்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணமான பெண் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்று, ஆபாசமான சைகைகளைக் காட்டிப் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற தவெக நிர்வாகி ஒருவரைப் பொதுமக்களே பிடித்து நையப்புடைத்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ”தவெக தலைமையிலான ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது என மேடைக்கு மேடை வீரவசனம் பேசும் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் அவ்வப்போது பெண்கள் சந்திக்கும் இன்னல்களுக்கு எப்போது முடிவுரை எழுதப்போகிறார்?”
”தவெகவினரிடமிருந்து பாதுகாக்க தனிப்படை தேவையா?”
தமிழகமெங்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றச்சம்பவங்களைத் தடுத்து நிறுத்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அமைத்துள்ளார். ஆனால், தவெகவினரின் இந்த அத்துமீறல்களைப் பார்க்கும்போது, பெண்களை தவெகவினரிடமிருந்து பாதுகாக்கவே மேலும் ஒரு ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை அமைக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டதா? என்று கேள்வி எழுகிறது. தன் தலைமையில் இயங்கும் தவெகவில் நிறைந்திருக்கும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது வெட்கக்கேடானது.

டிடிவி தினகரனின் வலியுறுத்தல்
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமே அடுத்து அக்குற்றங்களில் ஈடுபட முயல்பவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும். இதனை உணர்ந்து முதலமைச்சர் விஜய் அவர்கள் செயல்பட வேண்டும். இனியாவது தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதை உறுதி செய்திட வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
எழுத்தாளர் பூமணி மறைவு தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு: இயக்குனர் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி அஞ்சலி!
