Homeசெய்திகள்தமிழ்நாடுலால்குடி அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

லால்குடி அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

-

- Advertisement -

தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்களில் பங்குதாரராகவும், இயக்குநராகவும் உள்ள விபரங்களை வேட்புமனுவில் மறைத்ததாகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கில், லால்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ

வழக்கின் பின்னணி
​நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட லீமா ரோஸ் மார்ட்டின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கு.ப. கிருஷ்ணன் மற்றும் திமுக வேட்பாளர் தி. பரிவள்ளல் ஆகியோரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த நிலையில், லீமாரோஸின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தி. பரிவள்ளல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு (Election Petition) தொடர்ந்துள்ளார்.

we-r-hiring

மனுவில் கூறப்பட்டுள்ள திடுக்கிடும் புகார்கள்
​திமுவ வேட்பாளர் பரிவள்ளல் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
​”லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ், தனது வேட்புமனு தாக்கலின் போது சொத்து மற்றும் வணிகத் தொடர்புகள் குறித்த பல்வேறு முக்கியத் தகவல்களைத் திட்டமிட்டு மறைத்துள்ளார். குறிப்பாக, தனது கணவரும் பிரபல தொழிலதிபருமான மார்ட்டினின் கீழ் இயங்கும், ​ஐ. மார்ட்டின் ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ​மாடர்ன் & கிரியேட்டிவ் கன்ஸ்ட்ரக்டர் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் பிரைவேட் லிமிடெட், எல்எம்எஸ் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், மார்ட்டின் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட், ​மார்ட்டின் லேண்ட்ஸ்கேப் பிரைவேட் லிமிடெட், ஹால் மார்க் ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட், டாமினன்ட் வில்லாஸ் அண்ட் ஏஜென்சீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய ஏழு முன்னணி நிறுவனங்களில் இயக்குநராகவும், பங்குதாரராகவும் (Shareholder) லீமாரோஸ் நீடித்து வருகிறார். இந்த விபரங்களை தேர்தல் ஆணையப் படிவத்தில் அவர் மறைத்துள்ளதால், விதிமுறை மீறலின் அடிப்படையில் அவரது முறைகேடான வெற்றியை ரத்து செய்ய வேண்டும்.”

உயர்நீதிமன்றம் உத்தரவு
​இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது.
​மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஏழு நிறுவனங்களில் பங்குதாரராக இருப்பதை லீமாரோஸ் மறைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கு குறித்து அதிமுக எம்.எல்.ஏ லீமாரோஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆகியவை விரிவான பதிலளிக்க உத்தரவிட்டார்.

​இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மூன்று வார காலத்திற்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் திருச்சி மாவட்டப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ