சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கை சிபிஐ (CBI) விசாரிக்க வேண்டும் என்றும், மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்களில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் இணைந்து மேம்படுத்த வேண்டும் என்றும் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசிய தலைவர் முருகன் ஆர்.செல்வன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துச் சென்னையில் உள்ள சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், தனது குழுவினருடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் முன்வைத்த கோரிக்கைகளின் விவரம்,

”தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வருகை – கூட்ட நெரிசல்”
செய்தியாளர் சந்திப்பில் பேசிய முருகன் ஆர். செல்வன், “சபரிமலைக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகப்படியான பக்தர்கள் செல்கிறார்கள். சபரிமலையில் ஒரு நாளைக்குச் சராசரியாக 70 ஆயிரம் பேர் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்ற நிலை உள்ள சூழலில், தற்போது தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்தக் கூட்டத்தைக் கேரள காவல்துறையால் மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் காவல்துறையினரையும் பாதுகாப்புப் பணியில் பயன்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தங்கம் திருட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை
தொடர்ந்து பேசிய அவர், “கோயிலுக்கு வரும் காணிக்கைப் பணம் மற்றும் தங்கம் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, நகை திருட்டு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுக்கு சுமார் 400 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. ஆனால், அதில் வெறும் 5 சதவீதப் பணம் மட்டுமே பக்தர்களின் வசதிக்காகச் செலவிடப்படுகிறது. கடந்த காலங்களில் கூட்ட நெரிசல் காரணமாகப் பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பிய வரலாறும் உண்டு. ஐயப்பனைத் தரிசிக்க 10 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்து நிற்கின்றனர்; ஆனால் அவர்களுக்குக் குடிநீர், அன்னதானம், சுத்தமான கழிப்பறை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் முறையாகச் செய்து தரப்படுவதில்லை” எனக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்
தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சமாஜம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கியக் கோரிக்கைகள்,
- சிறப்புப் பேருந்துகள்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களில் இருந்தும் சபரிமலை பம்பை வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
- இலவச ஆன்மீகப் பயணம்: ‘காசி ஆன்மீகப் பயணம்’ திட்டத்தைப் போல, 60 வயதுக்கு மேற்பட்ட பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய ஐயப்ப பக்தர்களை இலவசமாகச் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.
- பிரத்தியேக வரிசை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்குத் தமிழ்நாட்டின் முக்கியக் கோயில்களில் பிரத்தியேக வழிபாட்டு வரிசை (Special Queue) அமைக்கப்பட வேண்டும்.
4 மாநில அரசுகளுடன் சந்திப்பு
”பக்தர்கள் மலையாள மொழி தெரியாமல் பம்பை மற்றும் சந்நிதானத்தில் அவதிப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளின் சார்பில் சபரிமலையில் தனித்தனியாக ‘உதவி மையங்கள்’ (Help Centers) அமைக்கப்பட வேண்டும். இது குறித்து 4 மாநில அரசுகளையும் நேரில் சந்தித்துப் பேச உள்ளோம். பக்தர்களுக்கு இலவச பேருந்து சேவை மற்றும் இலவச அன்னதானம் வழங்கச் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் தயாராக இருக்கிறது. ஆனால் கேரள அரசு அதற்கு அனுமதி வழங்காமல், பக்தர்களை அதிகத் தொகை கொடுத்துப் பயணிக்க வைக்கிறது. தற்போது பொறுப்பேற்றுள்ள கேரள அரசு இந்த முறைகேடுகளைச் சரிசெய்து, பக்தர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று முருகன் ஆர். செல்வன் தெரிவித்தார்.
பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
