Homeசெய்திகள்தமிழ்நாடுகரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர் பூமணி மறைவு: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

-

- Advertisement -

கரிசல் நிலத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. பூமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த வேதனையடைந்ததாகத் திமுக கழகத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:

பூமணி

we-r-hiring

​வட்டார வழக்கை ஆவணப்படுத்திய படைப்பாளி
​கரிசல்காட்டு மக்களின் வாழ்க்கையையும், சமூகத்தில் நிலவிய கட்டமைப்புகளையும் மிக எளிமையான மொழியில் வெளிப்படுத்திய ஆகச்சிறந்த படைப்பாளராகத் திரு. பூமணி அவர்கள் திகழ்ந்தார். தமிழின் எந்த அகராதியிலும் பதிவாகாத பல வட்டார வழக்குச் சொற்கள் அவரது படைப்புகள் மூலமாக ஆவணப்படுத்தப்பட்டன. அவருக்கு சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றுத் தந்த ‘அஞ்ஞாடி’ எனும் புதினத்தின் தலைப்பும் கூட அத்தகைய வட்டார வழக்குச் சொல்லே ஆகும்.

திரையுலகப் பங்களிப்பு
​அவர் எழுத்தாளராக மட்டுமின்றி, ‘கருவேலம்பூக்கள்’ எனும் திரைப்படத்தை எழுதி, இயக்கித் தமிழ்நாடு அரசின் விருதினையும் பெற்றிருக்கிறார். அவரது புகழ்பெற்ற ‘வெக்கை’ நாவல், ‘அசுரன்’ திரைப்படமாகத் திரைக்கு வந்தபோது, மேலும் பல இளம் வாசகர்கள் பூமணியின் எழுத்துகளைத் தேடிப் படிக்கத் தொடங்கினர்.

கனவு இல்லம் திட்டம்
​அவரது இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், பூமணி அவர்களுக்குக் ‘கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி மகிழ்ந்ததை இந்த வேளையில் நினைவு கூர்கிறேன்.

குடும்பத்தினருக்கு ஆறுதல்
​இயல்பான நடையில் வீரியமான படைப்புகளைத் தந்து தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் பங்காற்றிய திரு. பூமணி அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

MUST READ