வியட்நாம் நாட்டில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர் முருகபிரபு. இவர் பழனியில் செல்போன் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். தொழிலில் பிஸியாக இருந்து வந்த முருகபிரபு, சற்று ஓய்வெடுப்பதற்காகத் தனது நண்பருடன் இணைந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வியட்நாம் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார். வியட்நாமின் புகழ்பெற்ற மற்றும் மிகப்பெரிய தீவான ஃபு குவோக் (Phu Quoc) கடற்கரை பகுதியில், முருகபிரபு மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இன்று ஒரு விசைப்படகில் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அந்தப் படகில் மொத்தம் 32 இந்தியர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரெனக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கினர். உள்ளூர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட மீட்புப் பணிகளின்படி, 15 இந்தியர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
உயிரிழந்த 15 இந்தியர்களில், பழனியைச் சேர்ந்த முருகபிரபுவும் ஒருவர் என்ற அதிகாரப்பூர்வமற்ற அதிர்ச்சித் தகவல் தற்போது அவரது குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. ஆசையாக வெளிநாட்டுச் சுற்றுலா சென்ற நபர், இரண்டு நாட்களிலேயே பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் ஈடுசெய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மூலமாக முருகபிரபுவின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

