“கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த போது, திருச்சியில் இருந்து முதலமைச்சர் விஜய் ஓடியதை ஒட்டுமொத்த தமிழக மக்களும் பார்த்தார்கள்” என்று திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் வருகை தந்து, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது,

“எழுதிக் கொடுத்துப் பேச வேண்டிய தேவை நமக்கில்லை”
”திமுகவினருக்கு எழுதிக் கொடுத்து மேடைக்கு மேடை பேச வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. ஆனால், தற்போதைய முதலமைச்சர் விஜய், எழுதிக் கொடுத்ததைப் பார்த்துத் தான் மேடைகளில் பேசி வருகிறார். பேசும் போது வார்த்தைகள் மறந்தவுடன், அருகில் இருக்கும் பேப்பரைப் பார்த்துப் படிக்கிறார். இதனை மக்கள் அனைவரும் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகளையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கான முடிவு விரைவில் வரும். திமுகவைச் சேர்ந்தவர்கள் எந்தக் ஒரு சூழ்நிலையிலும் பயந்து ஓடி ஒளிபவர்கள் கிடையாது. அண்மையில் கரூரில் நடைபெற்ற அசம்பாவித சம்பவத்தில் 41 பேர் இறந்த நிலையில், திருச்சியில் இருந்த முதலமைச்சர் அங்கிருந்து ஓடியதை அனைவரும் பார்த்தார்கள். அப்படி ஓடுபவர்கள் ஒருபோதும் திமுகவினராக இருக்க மாட்டார்கள். திமுகவினர் யாரைக் கண்டும் அஞ்சுபவர்கள் இல்லை, சம்பவ இடத்திலேயே நின்று மக்களுக்காகப் பணியாற்றும் தலைவர்கள் தான் திமுகவில் இருக்கிறார்கள்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“முதலில் மாநிலப் பாடல்.. பிறகுதான் தேதிய பாடல்! – மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்!
