Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!

-

- Advertisement -

கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களுக்குத் தமிழகத்திலிருந்து ஜல்லி, கருங்கல், எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்து முறைப்படுத்தவும், தேவைப்பட்டால் அதற்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது.
புதிய அரசாணை

அண்டை மாநிலங்களால் ஏற்படும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு
​தமிழகத்தில் தற்போது சுமார் 3,000-க்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சார்ந்து, அரசின் அனுமதியுடன் 400-க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் (M-Sand) தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன.
​தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளுக்கும், தமிழகத்தின் கிரஷர்களில் இருந்துதான் ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் கற்கள் பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து பெங்களூரு மாநகரத்திற்கும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

we-r-hiring

இதன் காரணமாக, தமிழகத்திற்குள் இக்கட்டுமானப் பொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதோடு, உள்நாட்டுச் சந்தையில் இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால், தமிழகத்தில் சாமானிய மக்களின் வீடு கட்டும் செலவு மற்றும் பொதுவான கட்டுமானப் பணிகளின் திட்டச் செலவு (Project Cost) சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால், அண்டை மாநிலங்களுக்குக் கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை அரசு முறைப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன.

அரசாணையின் முக்கிய அம்சங்கள் மற்றும் இயக்குநருக்கு புதிய அதிகாரம்
​பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டவிரோத கனிமவளக் கொள்ளையைத் தடுத்தல், கடத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தில் (Mineral Rules) புதிதாகப் பல்வேறு விதிகளைச் சேர்த்துத் தமிழக அரசு தற்போது அரசிதழ் வெளியிட்டுள்ளது.

அதன்படி:
​கருங்கல் (Rough Stone), பாறைக் கற்கள் (Boulders), கண்டாஸ் (Khandas) ஆகியவற்றுடன் அளவு குறைக்கப்பட்ட உடைந்த அல்லது நொறுக்கப்பட்ட பொருட்களான எம்-சாண்ட், மெட்டல் ஜல்லி, பாலஸ்ட், ஆட்டுக்கல், கைச்சக்கை, கட்டிட மற்றும் சாலை கட்டுமானக் கற்கள் உள்ளிட்டவற்றை மாநில எல்லைகளைத் தாண்டிக் கொண்டு செல்வதைப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் இனி முழுமையாகக் கண்காணித்து முறைப்படுத்துவார்.

​தமிழ்நாட்டிற்குள் இக்கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடின்றி, போதுமான அளவில் சாமானிய மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், தேவைப்படும் பட்சத்தில் அண்டை மாநிலங்களுக்கான போக்குவரத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விரைவில் அமல்
​விதிகளைத் திருத்தி தற்போது அரசிதழில் (Gazette) வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் எப்போதிலிருந்து அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் நிலவும் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்பப்படுகிறது.

MUST READ