Homeசெய்திகள்தமிழ்நாடு 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..!

-

- Advertisement -


தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் : 

we-r-hiring

​நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல, கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

​இவர்களின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், “தேர்தல் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கக் கூடாது” எனத் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். ​இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசியல் சாசன சிக்கல்:

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் வழக்குகளில், தங்களை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனப் போட்டியிட்ட பிற வேட்பாளர்கள் கோருவது வழக்கம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்டால், ஒருவேளை பழைய வழக்கில் மனுதாரர் வெற்றி பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தால் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற அரசியல் சாசன சிக்கல் ஏற்படும். எனவே, தேர்தல் வழக்குகளில் இறுதி முடிவு எடுக்கும் வரை இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது” என்று வாதிட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரம் பயன்படுத்த தடை – அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
வழக்கைத் தொடர அடிப்படை உரிமை இல்லை: 

​தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், “தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே முதலமைச்சர் விஜய் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்கள் ராஜினாமா செய்தபோது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை” என்றார்.

முதலமைச்சர் விஜய் தரப்பில், சம்பந்தப்பட்ட தொகுதிகளின் வாக்காளராக இல்லாத மனுதாரருக்கு இந்த வழக்கைத் தொடர அடிப்படை உரிமை இல்லை என வாதாடப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் வழக்குகள் குறித்த அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்னும் தங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இடைக்காலத் தடை : 

​அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களது உத்தரவில், “ஜனநாயக நடைமுறையின் புனிதம் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், மனுதாரரின் அடிப்படை உரிமை குறித்த கேள்வி பொருந்தாது. தேர்தல் வழக்கு முடிவுக்கு வரும் முன்பே இடைத்தேர்தல் நடத்துவது அரசுப் பணத்தைச் வீணாக்குவதுடன், ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சாசன சிக்கலையும் உருவாக்கும். தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் வாதங்களை விரிவாக ஆராய வேண்டியுள்ளது” எனக் குறிப்பிட்டனர்.

​இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர் விஜய் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடத் தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

MUST READ