தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையச் சொல்லித் தன்னை மிரட்டியது யார் என்பது குறித்த முழு விவரங்களையும் காவல் துறையினரிடம் தெரிவித்துவிட்டதாக, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பிறகு முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். “திமுகவினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்” என்றும் அவர் அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார்.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் திமுக அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையச் சொல்லி மிரட்டல் விடுத்தார்கள்” என்று கூறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்த மிரட்டல் புகார் குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சி.எஸ்.ஆர். (CSR) பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இதுதொடர்பான விசாரணைக்கு இன்று (10-07-2026) பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு அனிதா ராதாகிருஷ்ணனுக்கு போலீசார் முறைப்படி சம்மன் அனுப்பியிருந்தனர்.
வழக்கறிஞர்கள், திமுகவினருடன் ஆஜர்
போலிசாரின் சம்மனை ஏற்று, இன்று பிற்பகல் தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் தனது வழக்கறிஞர்களுடன் நேரில் ஆஜரானார். அவருடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் எஸ்பி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADSP) மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார், அனிதா ராதாகிருஷ்ணனிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

யார் அந்த இரண்டு பேர்? அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
விசாரணை முடிந்து வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, ”கடந்த 3-ஆம் தேதி என்னை போலீசார் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்திருந்தனர். அப்போது நான் உணவருந்திக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு வந்த இரண்டு பேர் என்னை அணுகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையுமாறு கூறினர். நேரில் வந்து என்னிடம் பேசிய அந்த நபர்கள் யார், அவர்கள் குறித்த விவரங்கள் என்ன என்பதை இப்போது காவல் துறையினரிடம் முழுமையாகத் தெரிவித்துவிட்டேன். என்னை விசாரணைக்கு அழைப்பது குறித்துக் கேட்கிறீர்கள், எதற்கும் அஞ்சுகிறவர்கள் திமுகவினர் அல்ல. திமுககாரன் யாருக்கும், எதற்கும் அஞ்ச மாட்டான்.” இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடி வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தவெக தரப்பில் அவரிடம் பேசிய அந்த இரு நபர்கள் யார் என்பது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கரூரில் உணர்ச்சிப் பெருக்கு – மக்கள் சந்திப்பில் ‘வேட்டைக்காரன்’ பாடல் பாடிய முதலமைச்சர் விஜய்!
