ஜவ்வாது மலையில் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தைப் பாதிக்கும் அதானி குழுமத்தின் புதிய மின் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலம் தழுவிய பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மாசிலாமணி எச்சரித்துள்ளார். 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது,

ஐந்து மாவட்ட விவசாயத்தைப் பாதிக்கும் அதானி மின் திட்டம்
ஜவ்வாது மலையில் சுமார் ₹15,400 கோடி மதிப்பில் புதிய மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்த கௌதம் அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான ஜவ்வாது மலையில் அரிய வனவிலங்குகளும் உயிரினங்களும் வாழ்ந்து வரும் நிலையில், இத்திட்டம் வந்தால் சுற்றுச்சூழல் சமநிலை கடுமையாகப் பாதிக்கும். மேலும், இத்திட்டத்திற்குத் தேவையான தண்ணீரைப் பாலாற்றில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து ராட்சதக் குழாய்கள் மூலம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பாலாற்றை நம்பியிருக்கும் 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும், விவசாயப் பாசனமும் முற்றிலும் முடங்கி, விளைநிலங்கள் வறட்சியாக மாறும் அபாயம் உள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் கடந்த 2025 ஜூலை 1 அன்று ஒரு யூனிட் மின்சாரம் 9 ரூபாய் என்ற வீதத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்தத் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி மீறல் – போலி கடன் தள்ளுபடி
தேர்தலின் போது அனைத்து நிலுவை வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு ஆண்டுக்கான பயிர்க் கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரு விவசாயிகளுக்கு 35% மட்டுமே சென்று சேர்ந்துள்ளது; சிறு விவசாயிகளுக்குச் சென்றடையவில்லை. 2021-ஆம் ஆண்டு முதல் கடன்கள் நிலுவையில் உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அவர் செய்யும் தொழிலைப் பாராமல், விவசாயத்திற்காகக் கடன் பெற்ற அனைவருக்கும் முழுமையாகப் பொருந்த வேண்டும். ஆனால், வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் நிலுவைக் கடன்களை விவசாயிகள் முதலில் வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஒருபுறம் அரசு கடன் தள்ளுபடி என அறிவித்துவிட்டு, மறுபுறம் வங்கிகள் விவசாயிகளிடம் கடனை வசூலிப்பது ஏமாற்று வேலை. கடனாளர்களிடம் வசூலில் ஈடுபடக் கூடாது என்று வங்கிகளுக்கு அரசு உடனே சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து நிலுவைக் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால், தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் சங்கங்களையும் ஒருங்கிணைத்துத் மாநிலம் தழுவிய தொடர் போராட்டம் நடத்தப்படும்.
மேகதாது அணை விவகாரம்
கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழ்நாட்டின் நீர்வள உரிமையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. தமிழ்நாட்டுக்கு எதிராகப் பெங்களூருவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மாசிலாமணி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
”இனிமேல் தான் எங்களது விஸ்வரூபத்தை பார்ப்பீங்க!” – கரூரில் மேடையை அதிரவைத்த முதல்வர் விஜய்!
