கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய முதலமைச்சர் விஜய்யின் நடவடிக்கையை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், அதே கருணையின் அடிப்படையில் 1987-ஆம் ஆண்டு வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு,

கரூர் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி: பா.ம.க வரவேற்பு
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதலமைச்சர் விஜய் நேற்று வழங்கியுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கை தொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் இருந்தாலும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டு பார்க்கும் போது, வாழ்வாதாரம் இழந்த அக்குடும்பங்களுக்கு இந்த உதவி மிகவும் தேவையானது என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
இடஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்ட 25 பேர்
இத்தகைய கருணை அடிப்படையிலான உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அந்த வகையில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி கோரிக்கைகளை வலியுறுத்தி, 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி நடத்தப்பட்ட தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 21 பேர் உள்ளிட்ட 25 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை பெற முழு உரிமை உள்ளது. அவர்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலுள்ள 115 சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கையை வலியுறுத்தி, அறவழியில் போராடியவர்கள். ஆனால், அப்பாவிகளான அவர்களைக் காவல்துறையினர் காக்கை, குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தினார்கள்.
”பிறரை வாழ வைத்தவர்களை அரசு வாழ வைக்க வேண்டும்!”
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு அரசின் தவறு காரணமல்ல; ஆனாலும் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சமூகநீதிக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளின் குடும்பங்கள் இன்றளவும் வாழ்வாதாரமின்றி வறுமையில் வாடி வருகின்றன. அவர்கள் செய்த தியாகத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று பயனடைந்துள்ள நிலையில், தியாகிகளின் குடும்பங்கள் இன்னும் சமூகத்தின் அடிமட்டத்திலேயே தவிக்கின்றன. பிறரை வாழ வைத்த அந்த தியாகிகளின் குடும்பங்களை தமிழக அரசுதான் வாழ வைக்க வேண்டும்.
முதலமைச்சருக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
எனவே, கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போலவே, 1987 சமூகநீதிப் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளுக்கும் உடனடியாக இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைகளை வழங்கிட முதலமைச்சர் விஜய் அவர்கள் முன்வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
