“முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு சினிமா நடிகராகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். கரூரில் அவரது பேச்சிலும், உடல் மொழியிலும் எவ்வித துக்கமும் தெரியவில்லை; ஏதோ சினிமா கிளைமாக்ஸ் பாணியில் பேசி நாடகமாடுகிறார்,” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மிகக் கடுமையான வமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் கரூர் உரை மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் அளித்த அதிரடி பேட்டியின் விவரம் பின்வருமாறு,
”போலீஸ் மந்திரி அவர்தானே… என்ன நடவடிக்கை எடுத்தார்?”
கரூரில் கடந்த ஆண்டு நடந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், “கரூர் சம்பவத்தில் காவல்துறை மீது முதலமைச்சர் விஜய் பழியைப் போடுகிறார். ஆனால், தற்போது அவர்தானே காவல்துறைக்கு (Home Minister) பொறுப்பு வகிக்கும் அமைச்சர்? அன்று போலீஸ் தரப்பில் தவறு நடந்ததாகச் சொல்பவர், ஆட்சிக்கு வந்து 60 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? முதலமைச்சர் சொல்வது உண்மையா என்பதைப் பற்றிச் தற்போது சிபிஐ (CBI) விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின் முடிவில் முழு உண்மையும் வெளிவரும். அதை விடுத்து, தன் மீதான தவறை மறைக்கப் பழியை யார் மீதோ போடுவது எவ்விதத்திலும் சரியாக இருக்காது. இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

”கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிறார்”
விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது குறித்து விமரிசித்த அவர், “பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தனது சொந்தப் பணத்திலிருந்து உதவாமல், அரசு வேலையைத் தூக்கிக் கொடுப்பது என்பது ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதை’ போன்றதுதான். விஜய்க்கு இன்னும் சினிமா மோகம் மாறவில்லை என்பதை அவரது பேச்சுக்கள் காட்டுகின்றன. அரசியல் வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக யாரும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கத் தேவையில்லை. விஜய்யின் பேச்சில் ஒட்டுமொத்தமாக அகங்காரமும், ஆணவமும் மட்டுமே தாண்டவமாடுகிறது. இதைச் சுட்டிக்காட்டினால் அவரது ஆதரவாளர்கள் கொதிக்கிறார்கள்,” என்று சாடினார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா: பின்னணியில் மாபெரும் குதிரை பேரம்!
ஆறு தொகுதிகளில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தது குறித்துப் பேசிய தினகரன், “விஜய்க்குத் தனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. அதனால்தான், தந்திரமாக அதிமுக உறுப்பினர்களைத் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அதிமுக உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு பெரிய பலன் (Consideration) செய்யப்பட்டுள்ளது. இதையே நாம் அரசியல் மொழியில் ‘குதிரை பேரம்’ என்கிறோம். இன்னொரு கட்சியில் போட்டியிட்டு வென்றவர்களைத் தங்களின் சுயநலத்திற்காகச் சதி செய்து, தங்களின் கட்சியில் சேர்த்து வைத்திருப்பதே ஒரு பெரும் ஊழல்தான். அதிமுக உறுப்பினர்களைத் திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்ததும் ஊழலின் கீழ் தான் வரும்,” எனக் குற்றம் சாட்டினார்.
”தூய சக்தி அல்ல; நாசகார சக்தி!”
தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் தூய்மை பற்றிப் பேசும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஒன்றும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வந்த தூய சக்தி அல்ல; அது தமிழ்நாட்டை முற்றிலும் அழிக்க வந்த ஒரு நாசகார சக்தி,” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது பேட்டியில் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
