“பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறுகிறார். அந்த அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் பார்த்தால், வரும் காலத்தில் திமுகவும் – அதிமுகவும் கூட கூட்டணி அமைக்கலாம்,” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஒரு புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், தற்போதைய அரசியல் கூட்டணிகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்து அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு,
”அரசியல் சூழ்நிலை தான் எல்லாமே!”
பாஜகவை வீழ்த்த திமுக – தவெக இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து குறித்துப் பேசிய தினகரன், “பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவும் தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் சொல்கிறார். அப்படியென்றால், அதே ‘அரசியல் சூழ்நிலை’ (Political Situation) அடிப்படையில், வரும் காலத்தில் திமுகவும் – அதிமுகவும் கூட இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அரசியலில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது,” என்றார்.

”எந்தக் கூட்டணியும் சரிதான் என்றாகிவிடும்!”
தொடர்ந்து தற்போதைய தவெக அரசின் கூட்டணி தர்மம் குறித்து விமர்சித்த அவர், “தேர்தலில் உங்களை எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று, சுயநலத்திற்காக ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் வைக்கும் கூட்டணிதான் சரி என்று சொன்னால், அப்புறம் இந்த தமிழ்நாட்டு அரசியலில் எந்தக் கூட்டணியுமே சரிதான் என்றாகிவிடும். கொள்கை இல்லாத இத்தகைய கூட்டணிகள் மக்களை ஏமாற்றும் செயலன்றி வேறில்லை,” என்று சாடினார். தமிழக அரசியல் களம் தவெக, திமுக, அதிமுக எனப் பல்வேறு துருவங்களாகப் பிரிந்து மோதி வரும் வேளையில், “திமு-அதிமுக கூட்டணி” சாத்தியம் என்ற நோக்கில் டி.டி.வி.தினகரன் முன்வைத்துள்ள இந்த அரசியல் கணிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க அதிரடி: தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு!
