Homeசெய்திகள்தமிழ்நாடுவிவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!

விவசாயிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் – ஈ.ஆர். ஈஸ்வரன் கோரிக்கை!

-

- Advertisement -

​கட்டணமில்லா மின்சாரத்திற்கு அடித்தளமிட்ட 63 தியாகிகளின் குடும்பங்களை கனிவோடு பரிசீலிக்க வேண்டும்.. அரசியல் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு வேலை தரும்போது, விவசாய தியாகிகளுக்கு வழங்கக் கூடாதா? ​தமிழக முதலமைச்சருக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தல்..

ஈ.ஆர்.ஈஸ்வரன்

we-r-hiring

விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் கிடைக்கப் போராடி உயிர்நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு, கருணை மற்றும் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
​இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கட்டணமில்லா மின்சாரத்தின் பின்னணி வரலாறு:
கடந்த 1970-களில் விவசாயத்திற்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அப்போதைய அரசு போராட்டத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதில், தமிழகம் முழுவதும் 63 விவசாயிகள் காவல்துறையினரால் சுடப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த தியாகங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் தான் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு ‘கட்டணமில்லா மின்சாரம்’ வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இன்று தமிழகத்தில் விவசாயம் தொடர்ந்து உயிர்ப்போடு இருப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் இந்த இலவச மின்சார வசதிதான் மிக முக்கிய அடித்தளமாக விளங்குகிறது. இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு தமிழகம் முழுவதும் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அவர்கள் சுடப்பட்ட நாளில் விவசாயிகள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அரசு வேலை வழங்கக் கோரிக்கை:
கடந்த காலங்களில் எங்கள் கோரிக்கையை ஏற்று, உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் வாழ்வுக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், அது இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

ஈஸ்வரன் எழுப்பும் கேள்வி:
சமீபத்தில் கரூரில் நடந்த அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தற்போதைய அரசு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கிறோம். அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க முடியும் என்றால், ஒட்டுமொத்த தமிழக விவசாயக் குடும்பங்களும் வாழ்வதற்காக உயிரைத் தந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு ஏன் அரசு வேலை வழங்கக் கூடாது?

​மேடைகளில் பேசும் போதெல்லாம் ‘நான் எப்பொழுதும் விவசாயிகளுடன் இருப்பேன்’ என்று குறிப்பிடும் தற்போதைய முதலமைச்சர், இக்கோரிக்கையைக் கனிவோடு பரிசீலிக்க வேண்டும். மின் கட்டண உயர்வுப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்கிட முதலமைச்சர் உடனடியாக முன்வர வேண்டும் என ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ