Homeசெய்திகள்தமிழ்நாடு"மாநில உரிமைகளைத் தாரை வார்க்காதே!" - துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசை சாடிய...

“மாநில உரிமைகளைத் தாரை வார்க்காதே!” – துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசை சாடிய அன்புமணி!

-

- Advertisement -

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதியைச் சேர்ப்பதற்காகப் பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தத் தமிழக அரசு எடுத்து வரும் முடிவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது மாநில உரிமைகளைச் சட்டப்பூர்வமாகத் தாரை வார்க்கும் செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்."மாநில உரிமைகளைத் தாரை வார்க்காதே!" - துணைவேந்தர் தேடல் குழு விவகாரத்தில் தமிழக அரசை சாடிய அன்புமணி!

​இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய 5 பேர் கொண்ட தேடல் குழுவை அமைப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்காகப் பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்த அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தன்னாட்சி உரிமைகளைப் பறிக்கும் இந்த முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ​கடந்த 8-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையிலேயே இது குறித்து எச்சரித்திருந்தேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனிச் சட்டங்கள் உள்ளன. அதனடிப்படையில் அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி, பல்கலைக்கழகப் பிரதிநிதி என மூவரை மட்டுமே தேர்வுக் குழுவில் சேர்க்கச் சட்டத்தில் இடமுள்ளது. அதையும் மீறி, தமிழகப் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பங்களிக்காத யுஜிசி (UGC) பிரதிநிதியை உள்நுழைப்பது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தேன்” என நினைவுகூர்ந்துள்ளார்.

we-r-hiring

​வரலாற்றுப் பிழையாகிவிடும்
​யுஜிசி பிரதிநிதிக்குத் தேடல் குழுவில் இடமில்லை என்று தமிழக அரசு தீர்க்கமாக அறிவித்திருந்தால் இந்தச் சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டிய அன்புமணி இராமதாஸ் மேலும் கூறியதாவது,​”ஆனால், தமிழக அரசு அதைச் செய்யவில்லை. மாறாக, யுஜிசி பிரதிநிதியைச் சேர்ப்பது சட்டவிரோதம் என்ற பழியை மட்டும் துடைப்பதற்காக, பல்கலைக்கழகச் சட்டங்களையே திருத்த அரசு முன்வந்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் உரிமைகளைச் சாதாரணமாக இல்லாமல், சட்டப்பூர்வமாகவே தாரை வார்த்துக் கொடுக்கும் செயலாகும். இது நடந்தால், தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமைப் போராட்ட வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாக மாறிவிடும்.”

​நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை அவசரம் ஏன்?
​”பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது மாநில அரசுக்கா என்பது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அதிகபட்சமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். அதன் பிறகு எந்தத் தடையும் இல்லாமல் தமிழக அரசின் விருப்பப்படியே துணைவேந்தர்களை நியமிக்க முடியும். சூழ்நிலை இப்படி இருக்கும்போது, மாநில அரசு அவசரப்பட்டுத் தனது உரிமைகளைத் தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ​எனவே, துணைவேந்தர் தேடல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) பிரதிநிதிக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகச் சட்டங்களைத் திருத்தும் முடிவை உடனடியாகக் கைவிட்டு, நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று மாநில உரிமைகளை நிலைநாட்ட அக்கறை காட்ட வேண்டும் என்றும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சம்பா சாகுபடியும் கனவாகும் ஆபத்து: டெல்டா விவசாயிகளைக் காக்க சிறப்புத் திட்டம் தேவை – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

MUST READ