தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளிடம் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, 100 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுவரை 59 பள்ளிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மட்டும் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது முதற்கட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுமதி தருவதாகக் கூறி ஆசை வார்த்தை:
சென்னை சாலிகிராமத்தில், ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் பதிவு செய்யப்படாத போலி அமைப்பை நடத்தி வந்த அரசகுமார் என்பவர் இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளுக்குத் தேவையான நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளின் தரம் உயர்த்துதல், மற்றும் DTCP/CMDA ஆகிய துறைகளின் சட்டப்பூர்வ அனுமதிகளை எளிதாகப் பெற்றுத் தருவதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல தனியார் பள்ளி நிர்வாகிகளை அணுகியுள்ளார்.

அவர்களின் தேவைகளைப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் பணத்தைப் பெற்ற அரசகுமார், உறுதியளித்தபடி எந்தவொரு அனுமதியையும் பெற்றுத் தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி, ஒட்டுமொத்தமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் மெகா மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது மற்றும் தீவிர விசாரணை:
பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் வழக்குப் பதிவு செய்து அரசகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை (Digital Transactions) மூலமாகவே பல கோடி ரூபாய் கைமாறியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
24 வங்கி கணக்குகள் முடக்கம்; முக்கியக் குற்றவாளிக்கு வலை:
மோசடி மன்னன் அரசகுமாருக்குச் சொந்தமான 24 வங்கி கணக்குகளைப் போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளனர். மோசடி செய்த பணத்தைக் கொண்டு அவர் எங்கெங்கு சொத்துகளை வாங்கியுள்ளார், யாரிடம் பணத்தைப் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்துப் பொருளாதாரக் குற்றப்பிரிவு பாணியில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதற்கிடையே, இந்த மெகா மோசடி வழக்கில் முக்கியத் தொடர்புடைய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
புகார் அளிக்காத பள்ளிகளுக்கும் அழைப்பு:
இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 59 தனியார் பள்ளிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் புகாரளித்துள்ளன. அரசகுமாரிடம் ஏமாந்து, இன்னும் வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் மற்ற பள்ளி நிர்வாகங்களின் விவரங்களையும் திரட்டும் பணியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கின் முழு விசாரணை முடிவில் மோசடித் தொகை இன்னும் பல மடங்கு உயரக்கூடும் எனப் போலீசார் தரப்பில் அஞ்சப்படுகிறது.
