தமிழகத்தில் தற்போது மிக அசாதாரணமான சூழல் நிலவி வருவதாகவும், எதிர்க்கட்சிகளை நோக்கி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தாவும் போக்கிற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். இந்த சுயலாப அரசியல் போக்கு வளர அனுமதிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தவறான முன்உதாரணமாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தலைமைச் செயலகத்தில் வெளிநபர்களின் ஆதிக்கம்?
செய்தியாளர் சந்திப்பில் தமிழக அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த கிருஷ்ணசாமி, “தமிழகத்தில் அமைச்சர்களும், அரசும் பொறுப்பேற்கும்போது அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு பிரசாத் ரெட்டி ஆகிய இரு நபர்களுக்கு தலைமைச் செயலகத்திலேயே அலுவலகம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வருகிறது. அவர்கள் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்து கொள்வதாகத் தெரிகிறது,” எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், “கடந்த 30-40 ஆண்டுகளாக தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் குறித்து முதலமைச்சருக்கு உளவுத்துறை அதிகாரிகள்தான் தினந்தோறும் நேரில் விளக்கம் அளிப்பார்கள். ஆனால், இப்போது தமிழக முதலமைச்சர் அவர்களை நேரடியாகச் சந்திக்காமல், அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட இந்த நபர்களைச் சந்திப்பதாகத் தெரிகிறது. 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் இப்படி அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட நபர்கள் தலைமைச் செயலகத்தில் அமரக் கூடாது. இதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் பெருகி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், “லாட்டரியைத் தடுத்தாலும், அவர்கள் ஆன்லைன் கேம்கள் மூலமாக வேறு வடிவில் உள்ளே வருகின்றனர். இதை அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும்” என்றார்.
தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது குறித்துப் பேசிய அவர்:
”தேவேந்திரகுல வேளாளர் மக்கள் தங்களைப் பட்டியல் இனத்திலிருந்து (SC list) வெளியேற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே, இக்கோரிக்கையைப் பரிசீலனை செய்து, அவர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.”
மாஞ்சோலை தொழிலாளர்கள் பிரச்சினை
2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தைக் குறிப்பிட்டுப் பேசிய கிருஷ்ணசாமி, வனப்பகுதியை வாழ்வாதாரமாகக் கொண்டு நூறாண்டுகளுக்கு மேலாக வாழும் சுமார் 1600 பழங்குடி மற்றும் இடைப்பட்ட குடும்பங்களை அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயல்வதாகவும், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாகவும் கூறினார். குறிப்பாக, நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியில் செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 2-ல் பிரம்மாண்ட மாரத்தான்
போதை மற்றும் புகையிலை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் உன்னத நோக்கத்தோடு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) சென்னையில் ஒரு மிகப்பெரிய மாரத்தான் போட்டியை நடத்தப் போவதாக கிருஷ்ணசாமி அறிவித்தார். இது முற்றிலும் அரசியல் சார்பற்ற நிகழ்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
