அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு இணங்கிவிடக் கூடாது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,
மாநில உரிமைகளில் தலையீடு
“இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என்றும், அது எந்தெந்த நிகழ்ச்சிகளில் பாடப்பட வேண்டும் என்ற பட்டியலையும் குறிப்பிட்டு மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது மட்டுமன்றி, மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடும் செயலுமாகும். எனவே, இந்தச் சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அத்துடன், ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாக்கும் உத்தரவைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.

வரலாறும் விவாதமும்
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே தேசிய கீதமாக ‘ஜன கண மன’ இருப்பதா அல்லது ‘வந்தே மாதரம்’ இருப்பதா என்ற விவாதம் எழுந்தது. விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகே ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜன கண மன’ பாடல் தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 75 ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலால் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தேசிய கீதமாக மாற்ற முயல்கிறது. தொடக்கத்தில் ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் பாடினால் போதும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரத்தை ‘தேசிய பாடல்’ என்ற பெயரில் கட்டாயம் பாட வேண்டும் என ஆணை பிறப்பித்திருப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
வழிபாட்டுக் கொள்கைக்கு எதிரானது
1882-ல் வெளியான பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரின் ‘ஆனந்தமடம்’ நாவல் மூலம் பிரபலமான இப்பாடலுக்கு, சுதந்திரத்திற்கு முன்பே அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் கிடைக்கவில்லை. இப்பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால், முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் இதைப் பாடுவது அவர்களின் வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராக அமையும் என முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகள் அன்று எதிர்த்தன. இதன் காரணமாக விடுதலைப் போராட்டம் தொய்வடையக் கூடாது என்பதற்காக, 1937-ல் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். மதக் குறிப்புகள் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, முதல் இரண்டு பத்திகளை மட்டும் காங்கிரஸ் கூட்டங்களில் பாடப் பரிந்துரைத்தனர். 1950 அரசியல் நிர்ணய சபையிலும் விவாதிக்கப்பட்டு, இறுதியாக ‘ஜன கண மன’ பாடலே தேசிய கீதமாக உறுதி செய்யப்பட்டது.
விசிகவின் கோரிக்கை
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடியது முதல், அதனைத் தேசிய கீதமாக அறிவிக்க பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது மாநில அரசுகளுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மதச்சார்பின்மைக்கு மாறான, ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் இந்த மதவாத அரசியல் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு தொல். திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி – பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
