தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முன்னணிப் பேச்சாளர் லயோலா மணி நியமிக்கப்பட்டுள்ளார்.


தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், லயோலா மணிக்கு இதற்கான நியமன ஆணையை தமிழக முதல்வர் விஜய் வழங்கினார். இந்த நிகழ்வின் போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உடனிருந்தார். இந்தத் பதவியில் லயோலா மணி அடுத்த 3 ஆண்டுகளுக்குப் பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் – லயோலா மணி உறுதி:
முதல்வர் விஜய்யிடம் இருந்து பணி நியமன ஆணையைப் பெற்றுக்கொண்ட லயோலா மணி, தமிழகக் கல்வித் துறையின் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் தனது பங்களிப்பை முழு அர்ப்பணிப்புடன் வழங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
கழகத்தின் முக்கியப் பொறுப்புகள்:
தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைப்பில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகம் செய்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளும் முக்கியப் பொறுப்பைக் கொண்டது.
ஆட்சி மாற்றத்திற்குப் பின் புதிய நியமனம்:
முன்னதாக, திமுக ஆட்சிக் காலத்தில் இந்த மதிப்புமிக்கப் பொறுப்பை திண்டுக்கல் ஐ. லியோனி வகித்து வந்தார். தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தவெக பேச்சாளர் லயோலா மணி இந்தத் துறைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கல்வித் வட்டாரத்தில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது
