தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை விரித்துள்ளார்கள் என்றும், அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பு என்பது பாஜகவின் ஒரு கிளைக் கழகமே என்றும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள துவரங்குளம் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தைத் திறந்து வைத்த பின், சு. வெங்கடேசன் எம்பி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம்
செய்தியாளர்களிடம் பேசிய சு. வெங்கடேசன், “துவரங்குளம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நியாய விலைக் கடை கட்டடம் ரூபாய் 10 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதேபோல, இக்கிராம மக்களின் அடுத்த முக்கிய கோரிக்கையான பேருந்து வசதியும் உடனடியாகச் செய்து தரப்படும்” என்று உறுதியளித்தார்.
ஒரே புள்ளியில் இணைய வேண்டும்
தொடர்ந்து பேசிய அவர், “பாசிச பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், இந்திய மக்களின் ஒற்றுமைக்காகவும் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும். அந்தந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ இருக்கும் கட்சிகள், தங்களது மாநில அரசியலைத் தாண்டி, இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தேசிய அளவில் ஒரே புள்ளியில் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டார்.
அண்ணாமலையின் புதிய அமைப்பு ஒரு கிளைக் கழகம்!
பாஜக மூத்த தலைவர் அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்துக் காரசாரமாக விமர்சித்த சு. வெங்கடேசன், அண்ணாமலை அவர்களின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு என்பது பாரதிய ஜனதா கட்சியின் மற்றொரு கிளைக் கழகம்தான். தமிழ்நாட்டில் பாஜகவிற்கு அரசியல் ரீதியாக வியாபாரமாகவில்லை. அதனால், இப்போது புதிய பெயரில் ஒரு கடையை விரித்துள்ளார்கள்.” என எள்ளி நகையாடினார். நிறைவாக, தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளரான பூமணி அவர்களின் மறைவு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரது மறைவு பேரிழப்பு என்றும், அவருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சு. வெங்கடேசன் எம்பி வருத்தத்துடன் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக லயோலா மணி நியமனம்: முதல்வர் விஜய் உத்தரவு
