200 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இடம்பெற வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ள கம் லெட்ஸ் ரன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் உள்ள புத்தகக் கண்காட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தின் முதல் பிரதியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வெளியிட, அதனை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவு இயக்குனர் செசில் சுந்தர் பெற்றுக் கொண்டார். விழாவில், கிரிக்கெட் வீரர் முரளி விஜய், நடிகர்கள் பாண்டியராஜன், போஸ் வெங்கட், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லை என்று கூறுவோருக்காகவே “ஓடலாம் வாங்க” என்ற புத்தகத்தை எழுதியதாக கூறினார். 2004-ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட விபத்து மற்றும் நீரிழிவு நோய் தாக்கம் ஆகியவற்றை கடந்து, நடைபயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சியும் சீரான உணவுடன் நல்ல பழக்கவழக்கங்களையும் தாம் கடைபிடித்து வருவதனால், ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அந்த மாவட்ட அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் எச்சரிக்கையாகி விடுவதாகவும் காலையில் நடந்தே மருத்துவமனைக்கு அமைச்சர் வந்து விடுவார் என்ற உணர்வு, அவர்களுக்குள் ஏற்பட்டு, குறித்த நேரத்தில் பணிக்கு வருவதை கடைபிடித்து வருவதாகவும் மா.சுப்பிரமணியன் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கிரிக்கெட் முன்னாள் வீரர் ஶ்ரீகாந்த், தொடர்ந்து நடை பயிற்சி மற்றும் மாரத்தான் உள்ளிட்ட செயல்களில் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டு வருவதால், அவரை வைத்து, தமது குடும்பத்தில் தமக்கு திட்டுகள் விழுவதாக வேடிக்கையுடன் கூறினார். மா.சுப்பிரமணியனை பார்க்கும் போது வாரத்தில் இரண்டு நாட்களாவது நடக்க வேண்டும் என்ற உணர்வு தமக்கு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்றுள்ள மா.சுப்பிரமணியன், 200 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டுமென ஸ்ரீகாந்த் வாழ்த்துத் தெரிவித்தார்.


