2021-இல் ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து 2024 பாராளுமன்றத் தேர்தல் வரை 28 மாதங்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றிய திமுக அரசு, வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, இப்பொழுது ரூ.5,000 பணத்தைக் கொடுத்து, தங்கள் அவல ஆட்சியின் சுவடுகளை மறைத்துவிடலாம் எனத் தப்புக்கணக்கு போடுகின்றது என நயினாா் நகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.
இது குறித்து பாஜக மாநிலத்தலைவா் நயினாா் நகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஆட்சி தொடங்கியதிலிருந்து பொங்கலும் கோடை காலமும் எத்தனையோ முறை வந்திருக்கிறது. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பொங்கலும், கோடை காலமும் திமுகவின் கண்களுக்குத் தெரியுமா? உண்மையில் பொங்கலுக்கான ரூ.3,000-மும், கோடைகாலத் தொகை ரூ.2,000-மும் மக்கள் நலனுக்காகக் கொடுக்கப்பட்ட தொகை அல்ல, தேர்தல் தோல்வி அச்சத்தில் கொடுக்கப்பட்ட அச்சாரத் தொகையே!

2021-இல் இருந்து 2023 வரையிலான ₹28,000 மகளிர் உரிமைத் தொகையை வழங்காமல் ஏமாற்றிவிட்டு, 2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலருக்கு மட்டும் உரிமைத் தொகையை வழங்கிய திமுக, ஒருவேளை, தப்பித்தவறி துரதிஷ்டவசமாக 2026 தேர்தலில் வென்றால், உடனே 2026-இல் மகளிர் உரிமைத் தொகையை வழங்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
சொல்லப் போனால், திமுகவின் திட்டமே, தற்போது ரூ.5,000 வழங்கி அதையும் இதையும் செய்து குட்டிக்கரணம் அடித்து சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்துவிட்டால், முன்பு செய்தது போல, 3 ஆண்டுகள் வரை உரிமைத் தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டு, 2029 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கியதும் மீண்டும் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றலாம் என்பது தான்!
இந்த மோசடி திட்டத்தை நம்புவதற்குத் தமிழக மகளிர் முட்டாள்கள் அல்ல. அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000 வழங்கப்படும் என்று அறிவித்ததை ஈயடித்தான் காப்பி அடித்து, சுய கண்டுபிடிப்பு போல பெருமை பேசும் திமுகவின் வலையில் சிக்கமாட்டார்கள்! தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால், உறுதியாகத் தொடர்ந்து உரிமைத் தொகை வழங்கப்படும் என்பதை மகளிர் நன்கு அறிவர்! ரூ.25,000 வழங்காமல் ஏமாற்றிய திமுகவிற்கு வரும் தேர்தலில் ஏமாற்றத்தையே பரிசளிப்பர்” என பாஜக மாநிலத்தலைவா் நயினாா் நகேந்திரன் கூறியுள்ளாா்.
அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினாா் நகேந்திரன் காட்டம்


