கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். நெல்சனுக்கும் ரஜினிக்கும் இது சிறந்த கம்பேக் படமாக அமைந்தது. அந்த வகையில் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வரலாற்றுச் சாதனை படைத்தது. இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதிமாறன் நெல்சன், ரஜினி, அனிருத் உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த கார்களை பரிசாக வழங்கி சிறப்பித்தார். அதுமட்டுமில்லாமல் படத்தில் இடம் பெற்ற தமன்னாவின் காவாலா பாடல் படத்தின் ப்ரமோஷனுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
எனவே அடுத்ததாக நெல்சன், ரஜினியை வைத்து ஜெயிலர் 2 படத்தை இயக்கப் போவதாக சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. அதேசமயம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 படத்திற்காக அட்வான்ஸ் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு ரஜினிக்காக பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதையெல்லாம் முடித்த பின் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும், இது சம்பந்தமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா, ரஜினியுடன் இணைந்து சந்திரமுகி, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


