குடியரசு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றார்.
தமிழகத்தில் கடந்தாண்டு வரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆனால், தற்போது அப்பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதால், இந்தாண்டு உழைப்பாளர் சிலைப்பகுதிக்கு அணிவகுப்பு மாற்றப்பட்டது.

இதையடுத்து, கடந்த 20, 22, 24 ஆகிய மூன்று தேதிகளில் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான ஒத்திகை நடைபெற்றது. மேலும், 25, 26-ம் தேதி பிற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் உள்ள தலைவர்கள் நினைவிடத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காலை 7.50 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு சென்றனர்.
தொடர்ந்து, ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைத்தனர்.
இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பேரிடர் மேலாண்மை படையினர், ரயில்வே காவல் படையினர், ரிசர்வ் மற்றும் தொழில் பாதுகாப்பு படையினர், காவல், சிறை, வனம் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பும், இடையில் கடலோர காவல்படை, கடற்படை, விமானப்படையின் அலங்கார ஊர்திகளும் இடம் வலம் வந்தனர்.
தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
தொடர்ந்து, அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது, கடந்தாண்டு கொரோனா காரணமாக குறைந்த அளவு வாகனங்களே இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, ஒன்றிய அரசால் டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க மறுக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார வாகனம் தமிழக குடியரசு தின விழாவில் வலம் வந்தது.
இம்முறை, தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 21 அலங்கார வாகனங்கள் அணிவகுத்தது. இதுதவிர, கலை நிகழ்ச்சிகளை பொறுத்தவரை, ராஜஸ்தானின் குல்பாலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம், அசாமின் பாகுரும்பா நடனம், தமிழகத்தின் கரகாட்டம், கைசிலம்பாட்டம் மற்றும் பள்ளி ,மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறுது.

குடியரசு தினத்தை முன்னிட்டு, காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலை 5 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
