விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றக் கூடியவர், தமிழ்நாட்டுக்கு அமைச்சராக கிடைத்துள்ளார் என, அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் சென்னை மாவட்ட கைப்பந்தாட்ட கூட்டமைப்பு சார்பில் பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான மாநில கைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.


ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், 65 பள்ளிகள் மற்றும் 45 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
கைப்பந்தாட்ட போட்டியின் இறுதி நிகழ்வாக, எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், காவல் துறை முன்னாள் இயக்குனர் தேவாரம், தமிழ்நாடு கைப்பந்தாட்ட கழக மாநில தலைவர் எஸ். என். ஜே. ஜெயமுருகன் உள்ளிட்டோருடன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசையும் கோப்பையையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டை பொருத்தவரையில் வெற்றியோ, தோல்வியோ இல்லை என்றார். விளையாட்டில் பங்கு பெற்ற அனைவருமே வெற்றியாளர்கள் என அவர் கூறினார்.

தமிழ்நாடு விளையாட்டு துறையை பொருத்தவரையில் மிகவும் இளமையான, திறமையான அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளார் என்று அன்பில் மகேஷ் பேசினார்.
அதேபோல் விளையாட்டுத் துறை சார்ந்த நல்ல கோரிக்கைகள் அனைத்தையும் விளையாட்டுத் துறை அமைச்சர் உடனடியாக நிறைவேற்றுவார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிபடத் தெரிவித்தார்.
