கோவை மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கோவை மாநராட்சியில் 69 இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்தப் பணிகளுக்கு 654 பேர் விண்ணப்பித்த நிலையில், 440 பேர் நேர்முகத்தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டு அவர்களில் 54 பேர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால், உரிய தகுதி இருந்தும் தன்னால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்து கொள்ள முடியவில்லை. உரிய விதிகளையும், இடஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் இந்த 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரின் செல்வாக்கு காரணமாக, இவர்கள் அனைவரும் ஒரே நாளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களை ரத்து செய்து, தனக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, யாருக்கும் சலுகைகள் வழங்கப்படவில்லை என்றும், தேர்வு நடைமுறை, இடஒதுக்கீட்டு நடைமுறையே பின்பற்றியே நியமனங்கள் நடைபெற்றதாகவும் கோவை மாநகராட்சி தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் ஒரே நாளில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூய்மை பணியாளராக பணியாற்றும் மனுதாரர், இளநிலை பொறியாளர் தேர்வு நடைமுறையில் பங்கேற்காத நிலையில் வழக்கு தொடர முடியாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், நேரடி பணி நியமணத்தின்போது ஊழல் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.