திமுக தலைமையிலான அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாய பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யாமல் ஏமாற்றத்தை அள்ளித்தந்த ஒரு வெற்று அறிக்கை என சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவினர் கடந்த தேர்தலின்போது தங்களது தேர்தல் அறிக்கையில் வேளாண்துறைக்கு பல்வேறு கவர்ச்சிகர பொய்யான வாக்குறுதிகளை அளித்து விவசாய பெருங்குடி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. திமுகவினர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு புதிய திட்டங்களை அறிவிப்பதாக கூறுவது விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இதுபோன்று திமுகவினர் தமிழக விவசாயிகளை தொடர்ந்து ஏமாற்றி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கான ஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 2,500 ரூபாயாக உயர்த்தித்தரப்படும் என்றும், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையாக டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தமிழக விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதை நிறைவேற்றிடாமல் இன்று வரை ஏமாற்றி வருகிறது. இந்த 2024-2025 ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையிலும் இது சம்பந்தமாக எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அதே போன்று, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சிறுகுறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. திமுகவினரின் பொய்யான வாக்குறுதியை நம்பி, தங்கள் நகைகளை அடமானம் வைத்த விவசாயிகள் இன்றைக்கும் தங்கள் நகைகளை திருப்ப முடியாமல் கைவிட்டு போனதுதான் மிச்சம். இது திமுகவினர் திமுகவினர் தமிழக தமிழக விவசாயிகளுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு ஆலைகளும் தனியார் ஆலைகளும் வழங்க வேண்டிய நிலுவை தொகையை ஒரு காலவரையறைக்குள் பெற்று தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன திமுகவினர் இன்று வரை கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையினை பெற்றுத் தரவில்லை என்று கரும்பு விவசாயிகள் வேதனைப்படுகின்றனர். அதேபோன்று, நியாயவிலைக்கடைகளில் பனைவெல்லமும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுகவினரால் இன்றுவரை ஏன் செயல்படுத்த முடியவில்லை?
மேலும், இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் டெல்டா விவசாயிகளின் நிலைமையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமலும், எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் நெல்லை சாகுபடி செய்தாலும், அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமலும் டெல்டா விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை தடுக்க எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. திமுக ஆட்சியில் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2013 ஆம் ஆண்டு காவிரி நதி நீர் பங்கீடுக்கான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தார். அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு உரிய காவிரி நீரை தராமல் மறுத்த போது அதனை சட்ட போராட்டத்தின் வாயிலாக பெறவும் செய்தார். ஆனால், திமுக தலைமையிலான அரசு கர்நாடகத்திலிருந்து காவிரி நீரை பெற்று தருவதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் கர்நாடக அரசு காவிரி நீரை திறந்து விட ஆணையிட்ட போதும் அதை நடைமுறைப்படுத்தாத கர்நாடக அரசிடமிருந்து காவிரி நீரை கேட்டு பெற முடியாத திமுக தலைமையிலான விளம்பர அரசின் இயலாமைதான், இன்றைக்கு தமிழக விவசாயிகளின் இத்தகைய அவல நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குளிர் சாதன சேமிப்பு கிடக்கு பல மாவட்டங்களுக்கு அமைக்கப்பட வேண்டி உள்ளது. மண் வளத்தை காப்போம் என்று உரக்க கூறும் திமுக தலைமையிலான அரசு ஜிப்சம் வழங்க ரூபாய் 1 கோடி ஒதுக்கி உள்ளது வேடிக்கையாக உள்ளது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடைக்கானலில் உள்ள மன்னவனுரில் மலர் வளர்ப்பு பூங்கா அமைப்பதாக கூறிவிட்டு அதைப்பற்றி எந்தவித அறிவிப்பும் இடப்பெறவில்லை. புதிய வகை பழ வகைகள் கொடைக்கானலில் அறிமுகம் செய்யப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி வெள்ளி அருவி வழியாக ஓடிவிட்டதாக எண்ணத்தோன்றுகிறது. மண் வளத்தை காக்க அரசே மண்புழு உரங்களை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதை விட்டு விட்டு, 10,000 விவசாயிகளுக்கு மானியமாக 6 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்திருப்பது விந்தையான ஒன்று. பத்து லட்சம் வேப்ப மர கன்றுகள் வழங்க தமிழக அரசு இரண்டு கோடி ரூபாய் ஒதுக்குவதாக கூறியுள்ளது. ஆனால், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி காலத்திலேயே தோட்டக்கலைத்துறை மூலம் பல லட்சம் மரக்கன்றுகள் இலவசமாகத்தானே வழங்கப்பட்டு வருகிறது. நெல் மற்றும் கரும்பிற்கு பின் எண்ணெய் வித்துக்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன ஆனால் இந்த விளம்பர அரசால் அதற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
விவசாய பயிர்களை காக்க சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்க நிதி ஒதுக்கி உள்ள இந்த அரசு விலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள ஏன் தவறிவிட்டது. மேலும், ஊட்டி மலர் பூங்காவில் புதிய வகை ரோஜாக்கள் அறிமுகம் செய்யப்படும் என கூறும் திமுக தலைமையிலான அரசு, கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்காவை மேம்படுத்த ஏன் தவறிவிட்டது. அதேபோன்று, தென்னை மற்றும் இயற்கை விவசாயிகள் இன்றைய விளம்பர ஆட்சியில் பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளனர். திமுக தலைமையிலான அரசு இன்றுவரை விவசாயிகளின் நலனுக்காக எந்தவித பயனுள்ள திட்டங்களையும் கொண்டு வரவில்லை. 2024-2025 ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வெற்று அறிவிப்புகளை அளித்து, எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பெருங்குடி மக்களை மீண்டும் நம்பவைத்து ஏமாற்றி எப்படியாவது வாக்குகளை பெற திமுகவினர் நினைக்கின்றனர். ஆனால் தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் அழிக்கின்ற நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும் திமுகவினரை தமிழக விவசாயிகள் இனியும் நம்பப்போவது இல்லை. திமுக தலைமையிலான அரசு வெறும் கண்துடைப்பு திட்டங்களை அறிவிப்பதை நிறுத்தி விட்டு விவசாயிகளுக்கு உண்மையிலேயே பலன் அளிக்கும் திட்டங்களை அறிவித்து வேளாண் சமூக மக்களை காக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.