தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும் இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது
வரும் 23ஆம் தேதி அன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.