கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகள் செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் விஜய் கரூர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கிய பணி நியமன ஆணைகள் ரத்தாகியுள்ளன. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


நீதிமன்றம் எழுப்பிய காரசார கேள்விகள்:
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் போது, விதிகளை மீறி செயல்பட்ட அரசுத் தரப்பைப் பார்த்து நீதிபதிகள் கடுமையான கேள்விகளை எழுப்பினர்:
“தினந்தோறும் பல்வேறு சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன; விபத்தில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க முடியுமா?”
“சிவகாசியில் அவ்வப்போது நிகழும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகளில் ஏராளமானோர் பலியாகின்றனர், அவர்களின் குடும்பத்தினருக்கு இதுபோன்று அரசு வேலை வழங்க முடியுமா?”
முன்னுரிமை அளித்தது ஏன்? – அரசுக்குச் சாட்டை:
கருணை அடிப்படையில் அரசுப் பணி பெறுவதற்காக நூற்றுக்கணக்கானோர் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் நிலையில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வேலை வழங்கியது ஏன் என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு அரசுத் தரப்பில், “பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதாரணமான அரசு வேலையே வழங்கப்பட்டுள்ளது” என வாதம் முன்வைக்கப்பட்டது.
அரசுத் தரப்பின் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், “எந்தப் பணியும் சாதாரணம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவும் பணியே” என்று சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணைகளை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
