காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.


முதல்வர் விஜய் வாழ்த்துச் செய்தி:
இது குறித்து முதல்வர் விஜய் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்:
“ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ராஜா முத்துப்பாண்டியின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அவரது வெற்றி, இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கட்டும். அவர், மேலும் பல சாதனைகள் படைத்து இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாதனைப் பயணம்:
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என இந்தியா இதுவரை 4 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவு போட்டியில் பங்கேற்ற ராஜா முத்துப்பாண்டி, மொத்தமாக 286 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தமாக 266 கிலோ தூக்கி ஆறாம் இடம் பிடித்திருந்தார். அதன் பின்னர் காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணங்களால் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் மூலம் சர்வதேசக் களத்திற்குத் திரும்பிய அவர், தற்போது காமன்வெல்த் மேடையில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!
