‘தினமலர்’ நாளிதழில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மற்றும் அப்பட்டமான பொய் என்று கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வன்மையாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடகச் செய்தி விவரம் பின்வருமாறு:


போராட்டப் பின்னணியும் பாலன் இல்ல நிகழ்வுகளும்:
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் கடந்த ஜூன் 20 முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் தொடங்கப்பட்டது. கல்வியாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ‘சன்சத் சலோ’ இயக்கத்தின் மீது கடுமையான அடக்குமுறைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக, சென்னலிலுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான ‘பாலன் இல்லம்’ வளாகத்தில் ஜூன் 20 முதல் 26 வரை போராட்டம் அமைதியாக நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும், இளைஞர் பெருமன்றமும் இணைந்து வழிநடத்திய இந்தப் போராட்டக் களத்திற்குப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை ஆளுமைகள், கல்வியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் எனப் பலரும் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் உளவுத்துறை அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், சில எதிர்மறைக் கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், ஜனநாயக முறையில் அவை நெறிப்படுத்தப்பட்டே வந்தன. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.
தவெக மேலிடம் கண்டித்ததாக வெளியானது அப்பட்டமான பொய்:
இந்நிலையில், “தவெக மேலிடம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைக் கண்டித்ததாகவும், அதற்குத் தவெக மேலிடத்தில் கட்சி விளக்கம் அளித்ததாகவும்” ‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது; யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கிலானது என்று மு. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் நிலைப்பாடு மற்றும் எச்சரிக்கை:
சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தீர்ப்பை மதித்து தவெக ஆட்சிக்கு சிபிஐ ஆதரவு தருவதாக முடிவு செய்திருந்தாலும், பின்னர் அரசியல் நிகழ்வுகளைப் பரிசீலித்து “நிகழ்கால அரசியல் சூழலில் கட்சி எந்தக் கூட்டணியிலும் இணைந்து செயல்படுவதற்கான தேவை எழவில்லை” என்று மாநிலக் குழு தீர்மானித்துத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சும் கட்சி அல்ல என்றும், கட்சியின் முடிவைச் செயல்படுத்துவதில் ராணுவமே குறுக்கிட்டாலும் அதனை எதிர்க்கும் நூறாண்டு கால வரலாறு அதற்கு உண்டு என்றும் மு. வீரபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். தவெகவும் அதன் அரசும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், நீட் எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் தங்களின் பங்களிப்பு குறித்தும் ‘தினமலர்’ வெளியிட்டுள்ள தவறான செய்தியைத் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!
