“அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (Transgender) எனத் தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுமா?” என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் விரிவான விளக்கம் அளிக்குமாறு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவும், தமிழக அரசின் மேல்முறையீடும்
அரசு வேலைவாய்ப்புகளில் தங்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டி, மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றத் தனி நீதிபதி (Single Judge), “அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எனத் தனியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனத் தமிழக அரசுக்குத் தீர்ப்பளித்திருந்தார். இருப்பினும், இந்த உத்தரவை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் அமர்வின் அதிரடி விசாரணை
இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தர்மசிந்தனை அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிக முக்கியமான வாதமொன்றை முன்வைத்தார், ”அண்டை மாநிலமான கர்நாடகாவில், அரசு வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக 1 விழுக்காடு (சதவீதம்) தனி இட ஒதுக்கீடு வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது. அதே மாடலைத் தமிழ்நாட்டிலும் பின்பற்றி, இச்சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசு முன்வர வேண்டும்.” என்று தெரிவித்தாா்.
ஆகஸ்ட் 4-க்குள் கெடு!
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, கர்நாடக மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது போல் தமிழ்நாட்டிலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசின் கொள்கை முடிவு என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றனர். மேலும், இது குறித்துத் தமிழக அரசு உரியப் பரிசீலனை செய்து, வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் விரிவான விளக்கத்தை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
