மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில் பர்சனல் செக்யூரிட்டி வேலை தருவதாகக் கூறி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைப் புதுச்சேரிக்கு வரவழைத்து, ஒரு வாரம் அறையில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்ததோடு, அவரிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக் கொலை மிரட்டல் விடுத்த கடலூர் தொழிலதிபரைப் புதுச்சேரி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி மற்றும் கடலூர் எல்லைப் பகுதியில் சினிமா பட பாணியில் நடந்துள்ள இந்த பரபரப்பான சம்பவம் குறித்த விரிவான விவரம் வருமாறு,

ரூ.1 லட்சம் சம்பள ஆசை வார்த்தை
கேரள மாநிலம், திருவனந்தபுரம் தள்ளாளம் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தனது குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவருக்குத் தெரிந்த கேரளாவைச் சேர்ந்த ஷாஜி என்பவர், புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் தனியார் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வரும் கடலூர் மாவட்டம் குடிகாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமிகாந்தன் (வயது 42) என்பவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளார். அந்த பெண் லட்சுமிகாந்தனைத் தொடர்பு கொண்டு பேசியபோது, தனக்கு “பர்சனல் செக்யூரிட்டி” வேலை இருப்பதாகவும், அதற்கு மாதச் சம்பளமாக ரூ.1 லட்சம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண் வேலைக்காகப் புதுச்சேரிக்கு வந்துள்ளார். புதுச்சேரி வந்த பெண்ணைத் தனது காரில் ஏற்றிச் சென்ற லட்சுமிகாந்தன், முதலில் கடலூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைத்துள்ளார்.
அறையில் சிறைவைப்பு – ரூ.5 லட்சம் மோசடி
மறுநாள் காலை அந்தப் பெண்ணைப் புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராதா நகர் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் மாடி அறைக்கு லட்சுமிகாந்தன் மாற்றியுள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் கேட்டதற்கு, “நிறுவனத்தில் தற்போது சிவில் வேலைகள் நடந்து வருகிறது, அது முடிந்ததும் ஒரு வாரம் கழித்து வேலைக்கு அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறி அங்கேயே தங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகவும், ஓரிரு நாட்களில் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறி அந்தப் பெண்ணிடம் லட்சுமிகாந்தன் 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். முதலாளிதானே கேட்கிறார் என நம்பிய அந்தப் பெண், தனது வங்கிக் கணக்கிலிருந்து லட்சுமிகாந்தனின் கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால், சில நாட்கள் கழித்துப் பெண்ணைத் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, லட்சுமிகாந்தன் தட்டிக்கழித்து வந்துள்ளார்.
குடிபோதையில் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல்
பணத்தை மீண்டும் மீண்டும் கேட்டதால் ஆத்திரமடைந்த லட்சுமிகாந்தன், பகல் நேரத்தில் கடுமையான குடிபோதையில் பெண் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். “பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வாயா? உனக்குப் பணம் தர முடியாது. எனக்கு முதலமைச்சர் முதல் உயர் காவல் அதிகாரிகள் வரை அனைவரையும் தெரியும், என்னை ஒன்றும் செய்ய முடியாது” எனக் கூறி அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டுவது போல் கட்டாயப்படுத்திப் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தை வெளியே எவரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் லட்சுமிகாந்தன் மிரட்டியுள்ளார்.
தப்பியோடிப் புகார் – தொழிலதிபர் அதிரடி கைது
லட்சுமிகாந்தனின் கொடூரப் பிடியில் இருந்து எப்படியோ தப்பியோடி வந்த அந்தப் பெண், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட கிருமாம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்யா ஆகியோர் உடனடியாகச் செயல்பட்டு, வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக முயன்ற தொழிலதிபர் லட்சுமிகாந்தனை அதிரடியாகக் கைது செய்தனர். வேலை தேடி வந்த வேற்று மாநிலப் பெண்ணை ஏமாற்றி, சிறை வைத்துப் பலாத்காரம் செய்து பணத்தைப் பறித்த தொழிலதிபரின் செயல் புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தற்போது லட்சுமிகாந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
