வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் பிட்காயின் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 5 பேர் கொண்ட சர்வதேச நெட்வொர்க் கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள் என்பவர் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த 2025 செப்டம்பர் மாதம் அவர் கோவையில் இருந்தபோது, அவரது வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் செயலிகளுக்கு மர்ம நபர்களிடமிருந்து பகுதி நேர வேலை மற்றும் ஆன்லைன் வர்த்தக முதலீடு தொடர்பான குறுஞ்செய்திகள் வந்துள்ளன. குறுகிய காலத்தில் பெரும் லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அவர், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ. 27.45 லட்சம் தொகையை அந்த மோசடி கும்பல் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் போலீஸாரின் அதிரடி வேட்டை
இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்த மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடைய 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதானவர்கள் விபரம்,
- கோவையைச் சேர்ந்த வசந்த் (20)
- கோவையைச் சேர்ந்த அஜல் (22)
- திருப்பூரைச் சேர்ந்த ஜனகன் (23)
- திருப்பூரைச் சேர்ந்த பரத் (26)
- நாகப்பட்டினத்தைச் சேர்ந்த உதயகுமார் (38), கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆதார் கார்டுகளைத் தவறாகப் பயன்படுத்தி 250 சிம்கார்டுகள் ஆக்டிவேட்
போலீஸாரின் ஆழமான விசாரணையில், இந்தக் கும்பல் மிகத் திட்டமிட்டுக் கூட்டுச் சதி செய்து நெட்வொர்க் அமைத்துப் பொதுமக்களை ஏமாற்றிய அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமாகியுள்ளன. வசந்த் என்பவர் தனது சொந்த வங்கி கணக்கை மோசடிப் பணப் பரிவர்த்தனைக்காக வாடகைக்கு விட்டுள்ளார். அஜல் என்பவர் இதற்கான கமிஷன் ஏஜென்ட்டாகச் செயல்பட்டுள்ளார். மோசடிக்குத் தேவையான பல்வேறு நபர்களின் வங்கி கணக்குகளையும் சிம்கார்டுகளையும் திரட்டித் தரும் இடைத்தரகராக (புரோக்கராக) இருந்துள்ளார். மேலும், சிம்கார்டு விற்பனையாளரான பரத், பொதுமக்களிடம் பிற தேவைகளுக்காகப் பெற்ற அடையாள ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்தி, அவர்களின் அனுமதி இல்லாமலேயே குற்றச் செயல்களுக்காக 250-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை சட்டவிரோதமாக ஆக்டிவேட் செய்து கொடுத்துள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான உதயகுமார், பிலிப்பைன்ஸ் நாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இந்தியா திரும்பிய இவர், இந்தியாவில் திரட்டப்படும் வங்கி கணக்குகளை வெளிநாடுகளில் உள்ள சர்வதேச மோசடி கும்பலுக்குப் பயன்படுத்த அனுப்பி வைக்கும் முக்கிய ஏஜென்ட்டாகச் செயல்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சென்னை மத்திய பிரிவு சைபர் கிரைமில் வழக்கு நிலுவையில் உள்ளது.
9 மாநிலங்களில் பரவியுள்ள வலைப்பின்னல்
இவர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில், தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் 9 மாநிலங்களில் 15-க்கும் மேற்பட்ட சைபர் குற்ற வழக்குகளில் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோசடி நெட்வொர்க்கில் தொடர்புடைய இவர்களது பிற கூட்டாளிகளைப் பிடிக்கவும், இவர்களால் பாதிக்கப்பட்ட மற்ற நபர்கள் யார் என்பதைக் கண்டறியவும் சைபர் கிரைம் போலீஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
