Homeசெய்திகள்க்ரைம்மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி...

மலிவு விலையில் கார், பைக் தருவதாக ரூ.10.46 லட்சம் மோசடி: நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரி சென்னையில் கைது!

-

- Advertisement -

சென்னையில் குறைந்த விலையில் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்கித் தருவதாகக் கூறி, 8 பேரிடம் ரூ.10.46 லட்சம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நாகர்கோவிலைச் சேர்ந்த பி.இ பட்டதாரியை தண்டையார்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

கார்

we-r-hiring

ஆசை வார்த்தை கூறி அலாக்காக்கிய மோசடி
​சென்னை தண்டையார்பேட்டை, டி.எச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (22). தனியார் ஐஸ்கிரீம் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் இவர், புதிய கார் ஒன்று வாங்கத் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தனது நண்பர் ரியாஸிடம் விஜய் கூறியுள்ளார். இதையடுத்து, ரியாஸ் தனக்குத் தெரிந்த அஸ்கர் மீரான் என்பவரை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

​விஜயிடம் பேசிய அஸ்கர் மீரான், புதிய காரை சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மையென்று நம்பிய விஜய், கடந்த 2025ஆம் ஆண்டு பல தவணைகளாக மொத்தம் ரூ.3,41,000/- பணத்தை அஸ்கார் மீரானிடம் கொடுத்துள்ளார்.

நண்பர்களையும் வளைத்த கும்பல்
​அஸ்கர் மீரானின் பேச்சை நம்பி, விஜய் தனது நண்பர்கள் 7 பேரிடமும் இதுபற்றிக் கூறியுள்ளார். அவர்களும் குறைந்த விலையில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாங்க ஆசைப்பட்டு, பல தவணைகளாக ரூ.7,05,000/- பணத்தை அஸ்கர் மீரானிடம் கொடுத்துள்ளனர். இவ்வாறு விஜய் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரிடமிருந்து மொத்தம் ரூ.10,46,000/- பணத்தை அஸ்கர் மீரான் வாங்கியுள்ளார்.

ஆனால், பணம் பெற்று நீண்ட நாட்களாகியும் கூறியபடி காரையோ, இருசக்கர வாகனங்களையோ வாங்கித் தராமல் அஸ்கர் மீரான் இழுத்தடித்துள்ளார். ஒரு கட்டத்தில் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

போலீஸார் அதிரடி கைது
​தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜய், தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். தங்களை ஏமாற்றிய அஸ்கார் மீரான் மீது நடவடிக்கை எடுத்து, தங்கள் பணமான ரூ.10,46,000/- ஐ மீட்டுத் தருமாறு புகாரில் கோரியிருந்தார்.

இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த குற்றவாளியைத் தேடி வந்த போலீஸார், வழக்கில் தொடர்புடைய அஸ்கர் மீரான் (40) என்பவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

​யார் இந்த அஸ்கர் மீரான்?
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட அஸ்கர் மீரான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பி.இ (B.E) பட்டதாரியான இவர் ரயில் நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடைகள் நடத்தி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பொறுப்பாளராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

​கைது செய்யப்பட்ட அஸ்கர் மீரான், விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

MUST READ