கணவரை இழந்த பெண் காவலரை மறுமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, 97 சவரன் தங்க நகை, 42 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு வாகனங்களை ஏமாற்றிப் பறித்த திருவொற்றியூர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி (ரவுடி) சிவராமனை ராயபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற காவலில் மலர்ந்த பழக்கம்
வேலூர் மாவட்டம் பாகாயத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க பெண் காவலர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மணலி புதுநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். துணை ராணுவத்தில் பணியாற்றிய இவருடைய கணவர் கடந்த 2016-ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், இவருக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு ராணி சாத்தங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, நீதிமன்ற வழக்கு விசாரணைப் பணிகளுக்காக அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, திருவொற்றியூர் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான அப்பு (எ) சிவராமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே சமூகம் என்பதால் இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது.
ஆசை வார்த்தை கூறி ஏமாற்று வேலை
பெண் காவலரின் கணவர் இல்லாத சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிவராமன், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி குடும்பத்தினரிடமும் நம்பிக்கை ஏற்படும் படி பேசியுள்ளார். ”எனக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். எனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சிவராமன் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய பெண் காவலர், பழைய வண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பில் சிவராமனுடன் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
ரூ.42 லட்சம் மற்றும் 97 சவரன் நகை சுருட்டல்
இக்காலக்கட்டத்தில், தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகக் கூறி கடந்த 2024 நவம்பரில் முதலில் 2 லட்சம் ரூபாய் வாங்கிய சிவராமன், அடுத்தடுத்து பல்வேறு காரணங்களைக் கூறி பெண் காவலரிடமிருந்து பல கோடிகளைப் பறித்துள்ளார். மொத்தம் 97 சவரன் தங்க நகை, வைரத் தோடுகள், 42 லட்ச ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை சிவராமன் ஏமாற்றிப் பறித்துள்ளார். நாட்கள் கடந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்யுமாறு பெண் காவலர் வற்புறுத்தியபோது சிவராமன் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அவனது நடத்தையில் சந்தேகமடைந்து, தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, ஓராண்டுக்கும் மேலாக ஏமாற்றி மிரட்டல் விடுத்து வந்துள்ளான்.

நீதிமன்ற உத்தரவால் பாய்ந்த வழக்கு: ரவுடி சிறையிலடைப்பு
பாதிக்கப்பட்ட பெண் காவலர் இதுகுறித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, ராயபுரம் போலீசார் ரவுடி சிவராமன், அவனது தாயார் மற்றும் மனைவி உட்பட உடந்தையாக இருந்த 6 பேர் மீது சட்டவிரோதமாகக் கூடுதல், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ரவுடி சிவராமனை நேற்று ராயபுரம் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான சிவராமன் மீது ஏற்கனவே வேலூர் மாவட்டம் பொன்னை, சிட்லபாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
