புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையனைப் புதுச்சேரி போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான விபரங்கள் வருமாறு:

புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒயிட் டவுன், அரசு பொது மருத்துவமனை மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இந்தத் திருட்டுச் சம்பவங்களைத் தடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்யப் புதுச்சேரி போலீஸார் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாகனத் தணிக்கையில் சிக்கிய கொள்ளையன்:
இத்தனிப்படையினர் நேற்று (ஜூலை 6) இரவு அண்ணாசாலை மற்றும் 45 அடி சாலை சந்திப்பில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்திப் போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தந்ததால், சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று பாணியில் விசாரித்தனர்.
விசாரணையில், அவர் சென்னை கோடம்பாக்கம், டாக்டர் சுப்ராயலு நகர், முதல் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ரமணா என்கிற பாபு (53) என்பது தெரியவந்தது. மேலும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் புதுச்சேரியில் திருடப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நண்பன் வீட்டில் பதுக்கல் – 8 வண்டிகள் மீட்பு:
கைதான ரமணா கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸ் குழுவினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். சேலம் கரும்புதூர் கிராமத்தில் உள்ள ரமணாவின் நண்பர் அண்ணாமலை என்பவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 7 மோட்டார் சைக்கிள்களைப் போலீஸார் மீட்டனர். அவரிடமிருந்து மொத்தம் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வண்டிகளின் விபரம்:
பெரியகடை காவல் நிலையம் (புதுச்சேரி) – 2 வண்டிகள்
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் – 2 வண்டிகள்
ஆத்தூர் காவல் நிலையம் (தமிழ்நாடு) – 1 வண்டி
சென்னை பல்லாவரம் காவல் நிலையம் – 1 வண்டி
சென்னை கோயம்பேடு காவல் நிலையம் – 2 வண்டிகள்
”கைதான ரமணா 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
இவர் மீது ஏற்கனவே தமிழகத்தில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் நுங்கம்பாக்கத்தில் டூவீலர் திருட்டு, எம்.ஜி.ஆர் நகரில் கார் திருட்டு மற்றும் பூந்தமல்லியில் கொள்ளை வழக்கு என மொத்தம் 3 முக்கிய வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.”
– புதுச்சேரி போலீஸ் தரப்பு.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைப்பு:
கைது செய்யப்பட்ட ரமணாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “புதுச்சேரியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட பகுதிகள் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்றி இருட்டாக இருந்ததே திருடர்களுக்குச் சாதகமாகப் போயுள்ளது. எனவே, அப்பகுதிகளில் தெரு மின்விளக்குகளை மேம்படுத்தப் பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தவும், கூடுதல் சிசிடிவி (CCTV) கேமராக்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தனர்.
