தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது சொந்தப் பேரன்கள் இருவர் மற்றும் பேத்தி ஆகிய மூவர் சேர்ந்து பாட்டியைக் கொடூரமாகக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோசலின் மேரி (74). கணவனை இழந்த இவருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், ரோசலின் மேரியுடன் அவரது மகன் வழிப் பேத்தியான குணபாக்கியவதி (20) மட்டும் உடன் வசித்து வந்தார்.

பின்னணி என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோசலின் மேரி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் தங்கத் தோடு மற்றும் வளையல்கள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. ரோசலின் மேரியின் மகள் வழிப் பேரனான வீரபாண்டியைச் சேர்ந்த அலெக்ஸ் (23) என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகையைப் பறித்துச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி, அலெக்ஸ் மீது திருட்டுப் பட்டம் கட்டி ஊர் பொதுமக்களிடமும், உறவினர்களிடமும் பேசியுள்ளார். இதனால் பாட்டி மீது அலெக்ஸ் கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
திட்டமிட்டு நடந்த கொடூரம்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அலெக்ஸ் மற்றும் அவரது மற்றொரு மகன் வழிப் பேரனான 16 வயது சிறுவன் ஆகிய இருவருக்கும் செலவுக்குப் பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் இருவரும் பாட்டியுடன் இருக்கும் பேத்தி குணபாக்கியவதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “எங்களுக்குப் பணமோ, நகையோ வேண்டும், அதற்கு நீதான் உதவ வேண்டும்” எனக் கேட்டுள்ளனர். அதற்கு குணபாக்கியவதியும் சம்மதித்துள்ளார். இதையடுத்து நள்ளிரவில் பாட்டியின் வீட்டிற்கு வந்த பேரன்கள் இருவரும், பேத்தி குணபாக்கியவதியை வீட்டின் வெளியே காவல் காக்க வைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் சென்ற இருவரும், அசந்து தூங்கிக் கொண்டிருந்த தங்களது சொந்தப் பாட்டி ரோசலின் மேரியின் வாய் மற்றும் மூக்கைப் பொத்தி, கொடூரமாகத் தாக்கி மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த மூன்றே கால் பவுன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
மூன்று பேர் கைது
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தங்களது ஆடம்பரச் செலவிற்காகப் பாட்டியைக் கூட்டுச் சேர்ந்து கொலை செய்ததை மூவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அலெக்ஸ் மற்றும் குணபாக்கியவதி ஆகிய இருவரையும் போலீசார் முறைப்படி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய 16 வயதே ஆன சிறுவனை மீட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர்.
நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க வாலிபர் வெட்டிக்கொலை – சிறுவன் உட்பட 8 பேர் அதிரடி கைது!
